யூனிபார்மை கழட்டிடுவேன் என்று போலீசை மிரட்டிய பெண்ணின் கதி என்ன ஆச்சு தெரியுமா.? ஆண்டவன் இருக்கான் குமாரு.

By Ezhilarasan BabuFirst Published Jun 11, 2021, 9:44 AM IST
Highlights

ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் வந்த பெண் மற்றும் அவருக்கு ஆதரவாக காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் வந்த பெண் மற்றும் அவருக்கு ஆதரவாக காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞர் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சேத்துபட்டு சிக்னலில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆனந்தன், தலைமை காவலரான ரஜித்குமார் உள்ளிட்ட காவலர்கள் கடந்த வாரம் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்றை வழி மறித்து விசாரணை செய்தனர். காரை ஓடி வந்த சட்டப்படிப்பு படிக்கும் மாணவி பிரீத்தி ராஜனிடமிருந்து ஓட்டுனர் உரிமத்தை பெற்று அபராத ரசீதை கொடுத்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த பெண் நடந்த விஷயத்தை வழக்கறிஞரான தன் தாயிடம் கூறி அங்கு வரவழைத்துள்ளார். 

அங்குவந்த அவரது தாயார் தனுஜா ராஜன், முகக்கவகவசம் இல்லாமல் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரசீதை வீசி எறிந்து இருவரும் கிளம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து தலைமை காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குபதிவு செய்தனர். கொலை மிரட்டல் விடுத்தது , அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுப்பது, பேரிடர் மேலாண்மை சட்டப்  பிரிவையும் சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணைக்கு ஆஜராகும்படி காவல்துறை இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தாய் மகள் இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை கூறுவது போல் மீன் வாங்க செல்லவில்லை என்றும், மருந்து வாங்க சென்ற மகளை காவல்துறை தடுத்ததால் அங்கு வந்து  காவல்துறையிடம் விளக்கம் கேட்டதாக வாதிடப்பட்டது. காவல்துறை பேசிய கடுமையான மோசமான வார்த்தைகள் அடங்கிய வீடியோ எடிட் செய்யப்பட்டு, வழக்கறிஞர் சமூகத்தினரின் பெயரை கெடுக்கும் வகையில் ஒரு பகுதி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், உணர்ச்சிவசப்பட்டு மட்டுமே தான் பேசியதாகவும், உள்நோக்கம் ஏதும் இல்லை எனவும் அந்த பெண் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளதால் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மக்களை காக்கும் பணியிலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ள காவல் துறையினரிடம் இதுபோல நடந்துகொள்ளக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கினார். இதுபோன்ற ஒரு சம்பவத்தில் முன் ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்பதாலும், வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதாலும் முன் ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் மெஹ்ருனிசா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமுர்த்தி ஆகியோரும், வழக்கறிஞர் சமூகத்தின் தரப்பில் பார் கவுன்சில் முன்னாள் தலைவர் டி,செல்வம், பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் லூயிசால் ரமேஷ், வழக்கறிஞர் ரேவதி ஆகியோரும், காவல்துறை தரப்பில் பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜெய்சங்கர் ஆகியோர் ஆஜரானார்கள்.
 

click me!