இது ஒரு நாடு.. இது ஒரு தேர்வு.. வணிக நாடகம் நடத்த ஒரு அரசு.. நீட் தேர்வுக்கு எதிராக கொதிக்கும் கமல்ஹாசன்.!

By Asianet TamilFirst Published Sep 14, 2021, 9:13 PM IST
Highlights

இது ஒரு நாடு, இது ஒரு (நீட்) தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
 

நீட் தேர்வு நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், தேர்வுக்கு முன்பாக சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த 19 வயதான தனுஷ், தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டார். இ ந் நிலையில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குக் கோரும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்நிலையில், நீட் தேர்வை சரியாக எழுதவில்லை என்று மன அழுத்தத்தில் இருந்த அரியலூரைச் சேர்ந்த 17 வயதான மாணவி கனிமொழி இன்று தற்கொலை செய்துகொண்டார். 
 நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தவறான முடிவை எடுக்கக் கூடாது என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்கிடையே ராஜஸ்தான் தலைநகர் ஜெயப்பூரில் நீட் தேர்வு வினாத்தாள் 35 லட்சம் ரூபாய்க்கு வினியோகிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சை அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இதுதொடர்பாக ட்விட்டரில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
அதில், “ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் விநியோகமாகிக் கொண்டிருக்க, இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு. சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்” என கமல்ஹாசன் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
 

click me!