
ஆள் மேலே ஆள் வுடுறாங்க, நடக்கும் போது கால் வுடுறாங்க, எங்களை இழுக்க நூல் வுடுறாங்க...என்று தருமபுரியில் பொங்கி வழிந்துள்ளார் மாஜி பழனியப்பன்.
தினகரன் அணியில் இருந்து கொண்டு எடப்பாடி - பன்னீர் அணிக்கு ஏக குடைச்சல் கொடுக்கும் நபர்களில் முக்கியமானவர்கள் மாஜி அமைச்சர்கள் பழனியப்பனும், செந்தில் பாலாஜியும்தான். இந்நிலையில் இவர்கள் இருவரையும் நோக்கிதான் பெரும் பாய்ச்சலைக் காட்டி வருகிறது போலீஸ். இதை ‘எங்களை அவர்களது அணிக்கு இழுப்பதற்காக கொடுக்கப்படும் நெருக்கடியே இது.’ என்று பொங்குகிறார் பழனி.
தினா அணியின் 18 எம்.எல்.ஏ.க்களும் தகுதி நீக்கம் செய்தப்பட்ட அன்று நமது ஏசியா நெட் தமிழ் இணைய தளத்தில் ‘தகுதி நீக்கம் பண்ணியாச்சு! அடுத்து அரெஸ்ட்தான்: விரட்டி விரட்டி வேட்டையாடும் எடப்பாடி அண்ட்கோ’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தோம். அது அப்படியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
நாமக்கல்லை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சுப்பிரமணியம் சந்தேகத்துக்கு இடமான வகையில் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பழனியப்பன் எம்.எல்.ஏ.வை நெருக்கி நெருங்கியது போலீஸ். எங்கே கைது செய்துவிடுவார்களோ என்று பயந்து அவர் உச்சநீதிமன்ற நிழலில் ஒதுங்கினார்.
அடுத்து, தான் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி கோடிகளை வாங்கி ஏமாற்றிவிட்டார் என்கிற பழைய கேஸை தூசி தட்டி செந்தில் பாலாஜியை குடகு வரை சென்று சேஸ் செய்தது சென்னையின் மத்திய குற்ற பிரிவு போலீஸ். அவரும் நீதிமன்றத்தை நாடினார்.
ஆக நாம் கூறியிருந்தது போல் தினகரன் அணியின் இந்த இரு முக்கிய தலைகளையும் நோக்கி வழக்கு அம்புகள் எய்ப்பட்டு வரும் நிலை தொடர்ந்து கொண்டிருந்தபோது அதிரடியாக கரூரில் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வட்டாரத்தில் வளைத்து வளைத்து ரெய்டு நடத்தப்பட்டது.
இதனால் எந்த நேரத்திலும் செந்தில் பாலாஜி கைது கூட ஆகலாம் என்று ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது.
இதையெல்லாம் அடிப்படையாக வைத்துத்தான் இன்று தர்மபுரியில் பேசிய பழனியப்பன் ‘தினகரன் அணியிலிருந்து வெளியேற எனக்கும், செந்தில் பாலாஜிக்கும் நெருக்கடி தருகிறார்கள்.
எத்தனை நெருக்கடிகள் கொடுத்தாலும் உண்மையான தொண்டர்களைக் கொண்ட அ.தி.மு.க.வின் பக்கமே இருப்போம்.’ என்றும் அழுத்திக் கூறியுள்ளார்.
ஓ.பி.எஸ்.ல ஆரம்பிச்சு ஜக்கையன் வரைக்கும் இதத்தாம்ணே சொன்னாவ! ஆனா என்னாச்சு பார்த்தீயளா?