
கிருஷ்ணகிரி
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்து, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, எல்லா துறைகளிலும் ஊழல் செய்து, லஞ்சம் வாங்கி, அதன்மூலமாக அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் பணம் கொடுத்து ஆட்சி நடத்துகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் பகிரங்க குற்றம் சாட்டினார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தருமபுரியில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர், கிருஷ்ணகிரியில் உள்ள கே.ஆர்.பி. அணைக்குச் சென்று அங்குள்ள மதகில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, பர்கூர் வந்த மு.க.ஸ்டாலின் அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில், "கே.ஆர்.பி. அணையை சீரமைத்துவிட்டதாக தற்போது அரசு கூறினாலும், அணையில் உள்ள 8 மதகுகளும் இப்போதும் பழுதடைந்த நிலையில்தான் தற்காலிகமாக செயல்படுவதாக உள்ளன. எனவே, உடனடியாக நிர்வாக ரீதியிலான நடவடிக்கையை எடுத்து, அந்த 8 மதகுகளையும் சீர்செய்து, புதுப்பிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கழிவுநீர் அணையில் கலப்பதாகவும், அதனால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருப்பதாகவும், இப்பகுதி மக்கள் என்னிடத்தில் எடுத்துச் சொன்னார்கள். எனவே, அணைக்கு வரும் கழிவுநீரை சுத்திகரிக்க, முகத்துவாரத்தில் ஒரு திட்டத்தை உடனே உருவாக்க வேண்டும் என்றார்.
பின்னர், செய்தியாளர்கள் குறுக்கிட்டு ஸ்டாலினிடம், "கர்நாடகாவில் காங்கிரசு ஆட்சி நடக்கும்போது, காவிரியில் நீர் வராமல் இருப்பதற்கு தி.மு.க.வும், காங்கிரசும்தான் காரணம் என்று தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டுகிறாரே? என்று கேட்டனர்.
அதற்கு, "இப்படியெல்லாம் பேட்டி தருவதற்கு மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள். காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகுவதற்கு பா.ஜ.க. ஆட்சிதான் காரணமே . ஏனென்றால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைத்திருந்தால், இந்தப் பிரச்சனையே நிச்சயம் வந்திருக்காது.
பா.ஜ.க. அரசு அதில் அலட்சியம் காட்டி வருவதால்தான், காவிரி டெல்டா பகுதியில் இப்படிப்பட்ட கொடுமையான நிலை ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம், தமிழிசை சௌந்தரராஜன் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
பின்னர், "கெமிக்கல் கலந்த நீர் அதிகமாக வந்ததால் கே.ஆர்.பி. அணையின் மதகு உடைந்ததாக அமைச்சர் சொல்லும் நிலையில், துருபிடித்திருந்த மதகை முறையாக புனரமைக்காத காரணத்தால் உடைந்ததாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்களே? என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு, "அந்த அமைச்சர் சொன்னதுபோல அதிகளவு ரசாயனம் கலந்த நீர் வந்திருக்கும் என்றால், இந்நேரத்தில் இங்குள்ள பயிர்கள் எல்லாம் கருகி போயிருக்க வேண்டும். எங்களுக்கு வந்துள்ள தகவல்களின்படி, கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் கழிவுநீரை அந்த மாநகராட்சி சார்பில் சுத்திகரிப்பு செய்த பிறகே இங்கு வருவதாக தெரிய வருகிறது.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக 2 மாவட்ட மக்களுக்கும் முழுமையாக தண்ணீர் வழங்குவதாக தவறான தகவல் சொல்வது போலவே, அமைச்சர்கள் மட்டுமல்ல, முதலமைச்சரே தவறான தகவல்களை சட்டமன்றத்தில் சொல்லி வருகிறார்" என்றார்.
மூன்றாவதாக, "அரசின் அலட்சியத்தால் இதுவரை 3 பேர் யானைகள் தாக்கி இறந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே?" என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு, "சூலூரில் யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. அதனால் சமீபத்தில் 2 பேர் இறந்துள்ளனர். அந்தத் துறையின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அம்மா சாப்பிட்டார், அம்மா தூங்கினார்” என்று முன்பு சொன்னது போலவே, இப்போதும் மேடைகளில் பேசி வருகிறாரே தவிர, மக்களின் பிரச்சனைகள் குறித்து அவர் கவலைப்படவில்லை" என்று ஸ்டாலின் கூறினார்.
பின்னர், "அ.தி.மு.க. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருக்கிறாரே?" என்றதற்கு "இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பது இதில் இருந்தே தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்து, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, எல்லா துறைகளிலும் ஊழல் செய்து, லஞ்சம் வாங்கி, அதன்மூலமாக அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கும் பணம் கொடுத்து ஆட்சி நடத்துகிறார்களே தவிர, வேறு எதுபற்றியும் அவர்களுக்கு கவலையில்லை" என்று மு.க.ஸ்டாலின் கூறி பேட்டியை நிறைவு செய்தார்.
இந்தப் பேட்டியின்போது எம்.எல்.ஏ.க்கள் செங்குட்டுவன் (கிருஷ்ணகிரி), ஒய்.பிரகாஷ் (தளி), முருகன் (வேப்பனப்பள்ளி), முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், கிருஷ்ணகிரி நகர தி.மு.க. செயலாளர் நவாப்,
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் அமீன், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் மற்றும் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமக்கவுண்டர் ஆகியோர் உடனிருந்தனர்.