திருவண்ணாமலை, கரூர், திருச்சி மேற்கில் தேர்தல் ரத்தா..? தேர்தல் ஆணையத்தில் புலம்பும் திமுக..!

By Asianet TamilFirst Published Mar 30, 2021, 8:49 AM IST
Highlights

தேர்தலில் திமுகவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியினரும் அதிகாரிகளும், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களுக்கு பணம் கொடுத்து திமுக மற்றும் அதன் தலைவர்கள் மீது கெட்ட பெயர்களை ஏற்படுத்தி வருகின்றனர் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
 

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “தமிழக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தலில் திமுகவுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவை பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சியினரும் அதிகாரிகளும், பத்திரிகை மற்றும் சமூக ஊடகங்களுக்கு பணம் கொடுத்து திமுக மற்றும் அதன் தலைவர்கள் மீது கெட்ட பெயர்களை ஏற்படுத்தி வருகின்றனர்.
மார்ச் 27 அன்று ஒரு நாளிதழில் கரூர், திருவண்ணாமலை, திருச்சி மேற்கு தொகுதிகளில் தேர்தல் ரத்து என்று செய்தி வெளியானது. இதேபோல் கே.என்.நேரு காவல்நிலையங்களுக்கு பணம் கொடுத்து தேர்தல் பறக்கு படையினர் வருவதை அறிந்து கொள்வதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனைதொடர்ந்து திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் திருச்சியில் உள்ள 6 காவல்நிலையங்களில் சோதனை செய்தபோது பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இவை சமூக ஊடகங்களில் வெளியாகின.
ஆணையர் செய்த விசாரணை நிமிடத்துக்கு நிமிடம் சமூக ஊடகங்களில் எப்படி பரவியது?, யார் தகவல் கொடுத்தது? காவல்நிலையத்தில் கைப்பற்றப்பட்ட பணம் திமுக வழக்கறிஞர்களுடையது என்று கூறினார்கள். இவை எல்லாமே கே.என்.நேருவின் பெயருக்கு தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் உயர் அதிகாரிகள் செய்தது என்பது தெரிய வருகிறது. எங்களுக்கு 3 கேள்விகளுக்கு தெளிவான விசாரணை வேண்டும். 1) மூன்று தொகுதிகளில் தேர்தல் ரத்து என எதை அடிப்படையாக வைத்து பத்திரிகை செய்தி வெளியிட்டது?, 2. சமூக ஊடக நபர்கள் எந்த விதத்தில் ரகசிய விசாரணை மற்றும் அறிக்கைகளை எப்படி பெறுகிறார்கள்?, 3) விசாரணையின் அறிக்கைகள் வெளியிடப்படுவதற்கு யார் பொறுப்பு?


உள்துறை அமைச்சராக இருக்கும் முதல்வரின் தலையீடு இல்லாமல், வருவாய்துறை மற்றும் தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்போது, போலீஸ் அதிகாரிகளின் விசாரணை வெளியே வர வாய்பே இல்லை. இந்தக் கேள்விகளுக்கு விடை கிடைத்தால், குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றிபெற இது ஆளுங்கட்சி போடும் திட்டம் என்பது தெரியவரும். எனவே இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு, இதுபோன்ற விஷயங்களில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதை நிறுத்தி, நேர்மையான தேர்தல் நடக்க வழி செய்ய வேண்டும்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!