
சசிகலா அணிக்கு ஆதரவாக செயல்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மீது பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அவர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்டதிலிருந்து அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
யார் ஆட்சியை தக்க வைப்பார்கள் என்ற பரபரப்பு நிலவி வந்த நிலையில், திருநாவுகரசர் சசிகலாவுக்கு ஆதரவாக பல கருத்துகளை முன்வைத்து வந்தார்.
சசிகலாவை ஆளுநர் பொறுப்பேற்க அழைக்காமல் இருந்த போதும் திருநாவுகரசர் சசிகலாவை ஆளுநர் பொறுபேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
மேலும், சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது காங்கிரசின் நிலைப்பாட்டை திருநாவுக்கரசர் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
இதனால் திருநாவுக்கரசர் மீது சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட்டோர் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கு வலுசேர்க்கும் வகையில் அண்மையில் டெல்லி சென்ற திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சோனியாகாந்தியையையும் ராகுல் காந்தியையும் நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, திமுகவுக்கு எதிராக திருநாவுக்கரசர் செயல்படுவதாக சோனியாகாந்தியிடம் அவர் புகார் தெரிவித்தாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசரை நீக்க சோனியா காந்தி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.