
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்டது.
இந்த கூட்டணியில் தே.மு.தி.க. மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் இணைந்தன. ஆனால் இந்த கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடிய முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து அக்கூட்டணியில் இருந்து தேமுதிக, த.மா.காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகள் வெளியேறின.
இதனையடுத்து மக்கள் நல கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய 3 கட்சிகள் மட்டுமே இடம்பெற்று இருந்தன.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிடுவது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் இடைத்தேர்தலில் நாம் போட்டியிட வேண்டாம் என்றும், தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இதற்கு உடன்படவில்லை.
இதையடுத்து அந்த கட்சியின் வேட்பாளராக வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன் அறிவிக்கப்பட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,
இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி யிடம் தெரிவித்தோம். அந்த நிலைப்பாட்டில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளருக்கு வாழ்த்து சொல்ல மட்டுமே இயலும் என்றும் அவரை ஆதரிக்க மாட்டோம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.