
வன்முறை வார்த்தைகளும்; ஆதித்யநாத்அடையாளமும்
உத்தரப்பிரதேச முதல்வராக தேர்வுசெய்யப்பட்டுள்ள கோரக்பூர் எம்.பி. யோகிஆதித்யநாத் பல முறை சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தீவிர இந்துத்துவ ஆதரவாளரான யோகி ஆதித்யநாத், சிறுபான்மையினர்கள் மீதும், இந்து மதத்துக்கு ஆதரவாகவும் கடுமையாக கருத்துக்களை தெரிவித்து சலசலப்பை உண்டாக்கியவர். அவர் கூறிய கருத்துக்கள் பின்பருமாறு
அடிக்கடி இலக்காகும் சிறுபான்மையினர்
சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்ய நாத் அவ்வப்போது தெரிவிப்பார்.
2014ம் ஆண்டு, ஜனவரி 9-ந்தேதி, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதித்யநாத் “10 முதல் 20 சதவீதம் வரை சிறுபான்மையினர் வசிக்கும் இடங்களில் ஆங்காங்கே வகுப்புக் கலவரங்கள் இடம்பெறுகின்றன.
20 முதல் 35 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியில் அந்தக் கலவரம் கடுமையாகவும், அதுவே 35 சதவீதம் பேரை தாண்டினால் அந்த இடங்களில் இந்துக்களுக்கு இடமில்லை என்ற நிலை உருவாகிறது.
இந்துகள் மீது சிறுபான்மையினர் தாக்குதலில் ஈடுபட்டாலோ அல்லது கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டாலோ, அதே விதத்தில் இந்துகள் பதிலடி கொடுப்பார்கள்“ என்று கூறியிருந்தார்.
அமீர்கான் வம்புக்கு இழுப்பு.
நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது, வேறுநாட்டுக்கு செல்கிறேன் என்று இந்தி நடிகர் அமீர்கான் பேசி இருந்தார். அப்போது. அதற்கு பதில் கொடுத்து பேசிய யோகி ஆதித்ய நாத், “ இந்தியாவை விட்டு அமீர்கான் செல்வதை ஒருவரும் தடுக்கவில்லை. மேலும், அவர் நாட்டை விட்டு சென்றால் மக்கள் தொகையை குறைக்க இது உதவும்” என்று அனைவரின் கண்டனத்தையும் பெற்றார்.
டிரம்புக்கு ஆதரவு
7 நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் வர அதிபர் டிரம்ப் சமீப்த்தில் தடை விதித்தார். அந்த உத்தரவை பாராட்டி யோகி ஆதித்ய நாத் பேசுகையில், “ அதிபர் டிரம்ப் பிறப்பித்த குடியேற்றதடை உத்தரவு போன்ற ஒரு தடை உத்தரவு இந்தியாவுக்கு தேவைதான்.இந்துப் பெண்களை காதலித்து மதம் மாறச் செய்யும் 'லவ் ஜிகாத்' ஆகிய விஷயங்கள் தேர்தலில் முக்கிய துருப்புச் சீட்டுக்களாக எங்களுக்கு இருக்கும் '' என்று பேசியதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
உ.பி. காஷ்மீரா?
உத்தரப்பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் ஷாமினி மாவட்டம், கைராணா பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, யோகி ஆதித்யநாத் பேசுகையில், “ ஷாமினிமாவட்டம், கைராணா பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 1990ம் ஆண்டில் காஷ்மீரில்பண்டிட் இந்துக்கள் எப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தினரால் வெளியேற்றப்பட்டார்களோ அதுபோல் இங்கும் நடக்கிறது. கைராணாவைமற்றொரு காஷ்மீராக மாற அனுமதிக்க மாட்டோம்.
பசுவைக் காக்க ‘மிஸ்டுகால்’
பசுவை நாட்டின் தாயாக அறிவிக்க வலியுறுத்தி பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத்‘மிஸ்டு கால்’ பிரச்சாரம் தொடங்கினார்.யோகி ஆதித்ய நாத் தலைமையில் ஹிந்துயுவ வாஹிணி என்ற அமைப்பு இந்த பிரசாரத்தை முன்னெடுத்தது.
பசுவை நாட்டின் தாயாக அறிவிக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை ஆதரித்து 07533007511 என்ற எண்ணுக்கு ‘மிஸ்டு கால்’ கொடுங்கள் என்ற அந்த அமைப்பு பிரச்சாரம் செய்தது.
நாடாளுமன்றத்தில் கதறி எழுத எம்.பி.
கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 26-ந்தேதி கோராக்பூரில் அமைதியை குலைக்கும்வகையில் ஆதித்யநாத் செயல்பட்டார் எனக்கூறி உபி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
நாட்கள் சிறையில் இருந்துவிட்டு வந்த யோகி நாடாளுமன்றத்தில் பேசுகையில், உத்தரப் பிரதேச போலீசார் என்னை கைது செய்தனர். ஆனால், எதற்காக கைது செய்தனர் என்பதை தெரிவிக்கவில்லை. 7 நாட்கள் வரை எப்.ஐ.ஆர்.பதிவு செய்யவில்லை
என்னை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குகள் தொடரப்பட்டதால், கோபமடைந்து என் மீது போலியான குற்றச்சாட்டுகளை போலீசார் அடுக்கடுக்காக பதிவு செய்தனர். மத்திய அரசு தான் எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் எம்.பி. சுனில் மகதோ சுட்டுக்கொல்லப்பட்டது போன்ற நிலைமை தான் எனக்கும் ஏற்படும். எனக்கு பாதுகாப்பு கொடுக்காவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் எனக்கூறி கதறி அழுதார்.
பாரத் மாத்தா கி ஜே
2016ம் ஆண்டு ஜூன் 30ந் தேதி ஜெய்சல்மாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜ எம்பி யோகி ஆதித்யநாத் பேசுகையில், பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்ல மறுப்பவர்கள் தங்களது சொந்த தாயையே சந்தேகப்படுபவர்கள். எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவன் தனது தாயை பற்றி பெருமிதமே கொள்வான். வெளிநாட்டு சக்திகளால் இந்தியாவின் பெருமைக்கு களங்கம் கற்பிக்கத்தான் இது போன்ற சதிகள் அரங்கேற்றப்படுகின்றன'' எனத் தெரிவித்தார்.
மசூதியில் விநாயகர் சிலைகள்
கோராக்பூரில் யோகி ஆதித்யநாத் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “காசிவிஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவுரங்கசீப் கியான்வாபி மசூதியை கட்டினார். இது எங்காவது நடந்துள்ளதா? அனுமதி கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர், கவுரி மற்றும் நந்தி சிலைகளை வைப்பேன்'' என்றார்.
சூரிய நமஸ்காரம்
வாரணாசியில் நடந்த ஒரு விழாவில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “ சூரிய நமஸ்காரம், யோகாவை எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். சூரிய கடவுளுக்கு நமஸ்காரம் செய்ய மறுப்பவர்கள் கடலில் மூழ்க வேண்டும் அல்லது தங்கள் வாழ்க்கையை இருட்டு அறையில் வாழ வேண்டும்'' எனத் தெரிவித்து இருந்தார்.