Thirumavalavan slam : அதிமுகவையும் பாஜகவையும் தமிழக மக்கள் ஆதரிக்கவே போவதில்லை.. போட்டுத்தாக்கும் திருமாவளவன்!

By Asianet TamilFirst Published Dec 25, 2021, 8:50 PM IST
Highlights

தமிழகத்தில் அதிமுகவும், கர்நாடகா உள்பட வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியும் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தியதை யாரும் மறந்துவிடவில்லை.

தமிழக மக்கள் அதிமுகவையும் பாரதிய ஜனதா கட்சியையும் ஆதரிக்கவே போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

அரசியல் கட்சிகள் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகின்றன. அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விசிக தலைவர் தொல். திருமாவளவன் கன்னியாகுமரிக்கு வருகை தந்தார். கிறிஸ்துமஸ் விழாவில் வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி கொண்டாடினார். பின்னர் திருமாவளவன் பேசினார். “இந்தியாவில் சனாதன தர்மத்துக்கு எதிராக சிறுபான்மையின மக்கள் போராடி வருகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதுமே சிறுபான்மையின மக்களுக்கு ஆதரவாகவே இருக்கும்.

பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் வெறுப்பு அரசியல் நடத்திக்கொண்டு வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைப் பொறுத்தவரை சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, சமூக நீதிக் கோட்பாடு ஆகியவற்றை ஆதரித்து வருகிறது. தந்தை பெரியாரும் அம்பேத்கரும் வகுத்து தந்த வழியில்தான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு சட்டங்களை இயற்றி வருகிறது. பாரதிய ஜனதா அரசு பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியிருக்கிறது. இது பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு முன்னோட்டம்தான்.

தமிழகத்தில் அதிமுகவும், கர்நாடகா உள்பட வட இந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியும் மதமாற்றத் தடைச் சட்டத்தை அமல்படுத்தியதை யாரும் மறந்துவிடவில்லை. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் குரலாகத்தான் அதிமுக திகழ்கிறது. எனவே, தமிழக மக்கள் அதிமுகவையும் பாரதிய ஜனதா கட்சியையும் ஆதரிக்கவே போவதில்லை.” என்று திருமாவளவன் பேசினார்.

click me!