DMK: வேலுமணியை அரெஸ்ட் பண்ணுவீங்களா? மாட்டீங்களா..? செந்தில் பாலாஜியை திணறடித்த உ.பி.க்கள்

By manimegalai aFirst Published Dec 25, 2021, 8:20 PM IST
Highlights

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எப்போது கைது செய்யப்படுவார் என்ற கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி எப்போது கைது செய்யப்படுவார் என்ற கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

கோவையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை ஏற்றார். திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செயற்குழு கூட்டத்தில் வரவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் கோவை திமுகவின் நிலைமையை பற்றி பேசிய உடன்பிறப்புகள், இங்கிருக்கும் அதிகாரிகள் இப்போதும் வேலுமணி பேச்சை தான் கேட்கின்றனர். குப்பையை கூட அள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று பேசினர்.

இதேபோன்று தான் கார்த்திகேய சிவசேனாபதி பேச்சும் இருந்தது. அவர் கூறியதாவது: வேலுமணிக்கு எதிராக ரெய்டு முடிந்து மாதங்கள் கடந்துவிட்டன. அவர் எப்போது கைது செய்யப்படுவார் என்று என்னை கேட்கிறார்கள். வேலுமணியை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்டவன் என்ற முறையில் நானும் கேட்கிறேன்.

வேலுமணி மீது எப்போது கைது நடவடிக்கை? சமூக வலைதளங்களில் நாள்தோறும் என்னிடம் இப்படித் தான் கேள்வி கேட்டு வருகின்றனர். கைது கிடையாதா? சமரசமா? என்றும் கேட்டு வருகின்றனர் என்று பேசினார்.

அனைத்தும் முடிந்த பின்னர் செந்தில் பாலாஜி பேசியதாவது: கோவை மாவட்டத்துக்கு விரைவில் உதயநிதி வருகிறார். கொடிசியாவில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள பூத் கமிட்டி நடக்கிறது.

இங்குள்ள அதிகாரிகள் வேலுமணி பேச்சைத்தான் கேட்கின்றனர் என்று சொன்னீர்கள். உள்ளாட்சி தேர்தல் எப்போது என்ற தேதி விரைவில் அறிவிக்கப்பட்டு விடும். 75 நாட்களில் நமது கவுன்சிலர்கள், மேயர்கள் வந்துவிடுவர்.

அப்புறம் அவர்கள் நம் பேச்சை கேட்டுத்தான் ஆக வேண்டும். ரெய்டு முடிந்தாலும் கைது எப்போது என்று கேட்கிறீர்கள். நாம் முன்னால் ஓடி கொண்டிருக்கும் தருணம் இது. எனவே பின்னால் திரும்பி பார்த்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். சட்டம் தமது கடமையை செய்யும், நாம் நம்முடைய பணிகளை செய்வோம் என்று கூறி இருக்கிறார்.

செந்தில் பாலாஜியின் இந்த பேச்சை கேட்ட உடன்பிறப்புகளின் ரியாக்ஷன் வேறு மாதிரியாக இருக்கிறது. வேலுமணி மீதான கைது நடவடிக்கை ஒன்று தான் இங்குள்ள உடன்பிறப்புகளுக்கு உற்சாகமானதாக இருக்கும்.

அந்த நடவடிக்கையை மையப்படுத்தி தான் கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற முடியும். அப்போது தான் அதிமுகவினர் பதிலடிக்கு நாம் பதில்கள் தர முடியும். ஆனால் அமைச்சர் பேசுவதை பார்த்தால் இப்போது கைது நடவடிக்கை என்பது கிடையாது போல என்று முணுமுணுக்க ஆரம்பித்து இருப்பது நன்றாகவே தெரிகிறது.

ஆனால் அரசியல் விமர்சகர்களின் கருத்துகள் வேறாக இருக்கிறது. இது குறித்து அவர்கள் கூறி இருப்பதாவது: எக்காரணம் கொண்டும் பழிவாங்கும் நடவடிக்கை என்ற அனுதாபம் கோவை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்க கூடாது என்பதில் திமுக தெளிவாக இருக்கிறது.

தெளிவான திட்டம், சரியான களப்பணி மூலம் கோவை மாவட்டத்தை முற்றிலும் கைப்பற்றிவிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி களமாடுவோம் எனறு நினைக்கின்றனர். ஆகவே தான் கைது நடவடிக்கை தாமதம் என்றும் கூறுகின்றனர்.

click me!