திருக்குறளை மேற்கோள் காட்டும் நிதி அமைச்சர்! தமிழகத்திற்கு அளிக்கும் சலுகை என அதையும் நிறுத்திவிட்டாரா- திருமா

By Ajmal Khan  |  First Published Feb 2, 2023, 8:54 AM IST

மோடி அரசால் வஞ்சிக்கப்படும் மக்கள் அடுத்து வரும் மாநிலத் தேர்தல்களிலும், பொதுத் தேர்தலிலும் சரியான பாடத்தை அவர்களுக்குப் புகட்டுவார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


துரோகமிழைக்கும் பட்ஜெட்

பட்ஜெட் தாக்கல் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை ஏமாற்றுகிற அறிக்கையாகும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை சமூகத்தவருக்கான திட்டங்கள் பலவற்றுக்கு நிதியைக் குறைத்து அவர்களுக்குத் துரோகமிழைக்கும் இந்த பட்ஜெட், நாட்டில் பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்ற சனாதன நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் இந்த மக்கள்விரோத பட்ஜெட்டை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.மோடி அரசால் வஞ்சிக்கப்படும் மக்கள் அடுத்து வரும் மாநிலத் தேர்தல்களிலும், பொதுத் தேர்தலிலும் சரியான பாடத்தை அவர்களுக்குப் புகட்டுவார்கள்.

Latest Videos

மத்திய பட்ஜெட் எப்படி இருக்கிறது? ஒரே வரியில் நச்சுன்னு சொன்ன டிடிவி. தினகரன்..!

மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பயன் இல்லை

குடியரசுத் தலைவர் உரையிலும், பொருளாதார ஆய்வு அறிக்கையிலும், இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கிய பாஜக அரசு,  இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் அதே ஏமாற்று வேலையைத் தொடர்ந்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களுக்கு வருமான வரி விதிப்பில்  மிகப்பெரிய சலுகை அளித்து விட்டது போல் நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் ஆரவாரமாக அறிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பால் 2 கோடி ரூபாய்க்கு மேல் வருட வருமானம் ஈட்டுகிறவர்களே பயனடைவார்கள், மாத சம்பளம் வாங்கும் மற்ற நடுத்தர வர்க்கப் பிரிவினர் எவருக்கும் இந்த அறிவிப்பால் எந்தவொரு பயனும் கிடையாது.

கிராமப்புறங்களைச் சார்ந்த மக்கள் பயனடைவதற்கென உருவாக்கப்பட்ட தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை மோடி அரசு வெகுவாகக் குறைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்தத் திட்டத்துக்கென 73 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டோ அது 60 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பட்டியலினத்தவர் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது குறைவாகவே உள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை... காங். தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு!!

சிறுபான்மையினரை அழிக்கும் நடவடிக்கை

சிறுபான்மையினர் நலத்துறைக்கு கடந்த ஆண்டு 5020.50 கோடி ஒதுக்கப்பட்டது. அதில் சுமார் 2000 கோடி ரூபாய் இந்தாண்டு குறைக்கப்பட்டு வெறும் 3097.60 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கொடுக்கப்படும் ப்ரி மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கான தொகையில் 1000 கோடி ரூபாயைக் குறைத்து இருக்கிறார்கள். சிறுபான்மை மதத்தினரைக் கட்டமைப்பு ரீதியாக திட்டமிட்டு அழிக்கும் நடவடிக்கையாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களைப்பற்றியோ, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றியோ ஒரு வார்த்தையும் சொல்லப்படவில்லை.

மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம்... முன்னாள் பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் ஆதரவு!!

வாய் ஜாலத்தால் மக்கள் ஏமாற்றம்

பட்ஜெட்டில் ஒவ்வொரு முறையும் திருக்குறளை மேற்கோள் காட்டும் நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அதையும் நிறுத்திவிட்டார். திருக்குறளைச் சொல்வதுகூட தமிழ்நாட்டுக்கு அளிக்கும் சலுகை என அவர் நினைத்துவிட்டார்போலும். ஒட்டுமொத்தத்தில் இந்த பட்ஜெட் வெகு மக்களுக்கு எதிரான பட்ஜெட். வேலை வாய்ப்புகளை உருவாக்காத பட்ஜெட். விலைவாசியைக் குறைக்க உதவாத பட்ஜெட். இந்தியப் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு எந்தவிதத்திலும் உதவாத பட்ஜெட். வாய் ஜாலம் மூலம் மக்களை ஏய்த்துவிடலாம் என நினைக்கும் மோடி அரசின் இந்த மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரியே இல்லையா..? திமுகவை விளாசும் கே.பி.முனுசாமி
 

click me!