
இந்து ஆலயங்கள் பற்றி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்ட தகவலால் கடந்த வாரம் அவருக்கு எதிராக பி.ஜே.பி. மற்றும் இந்துத்வ அமைப்புகள் அதகளம் செய்தன. தான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல என்று திருமா என்னதான் விளக்கம் அளித்தாலும் அது எதிர்ப்பு கோஷங்களுக்கு நடுவில் எடுபடாமலே போனது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசியிருக்கும் திருமா “திட்டமிட்டு என் மீது இந்து மக்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கிறது ஒரு கூட்டம். தலித் அல்லாத இந்துக்களின் வாக்கு வங்கியை குறிவைத்து எனக்கு எதிராக விஷமப் பிரச்சாரங்கள் கிளப்பிவிடப்படுகின்றன. நான் சொல்லாததை சொல்லியதாக திரித்துப் பரப்புகிறார்கள். இதை உண்மை என நம்பும் அப்பாவி இந்துக்கள் என் மீது கோபம் கொள்கிறார்கள். பாவம், அவர்களுக்கு உண்மை தெரிவதில்லை.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் பலவீனத்தை மதவாதிகள், சாதியவாதிகள் இருவரும் வலுவாக பயன்படுத்துகிறார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு நடத்தப்பட்ட ரெய்டுகளின் மூலம் அ.தி.மு.க.வினருக்கு மறைமுக நெருக்கடி கொடுத்து அவர்களை கட்டுக்குள் வைத்துள்ளார்கள். அதனால்தான் தனி மனிதர்களுக்கு எதிராக வன்மமாக போராட முடிகிறது அவர்களால். மாநில அரசை கைக்குள் வைத்துக் கொண்டு, தமிழகத்தில் ஒரு சமூக பதற்றத்தை உருவாக்க துடிக்கிறது பி.ஜே.பி.
சிறுபான்மையினருக்கும், மதவாதத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கும் ஆதரவாக விடுதலைச்சிறுத்தைகள் இருப்பது பி.ஜே.பி.யின் கண்களை எரிச்சலாக்குகிறது. அதனால்தான் ’ராஜா’க்கள் கண்டபடி பேசுகிறார்கள்.
இந்துக் கோயில் விவகாரத்தில் நான் பேசியதற்கு தி.மு.க.விலிருந்தே எதிர்ப்பு வந்ததாகவும் ஒரு புகைச்சல் கிளப்பிவிடப்பட்டுள்ளது. இது ஒரு வதந்திதான். இப்படி கிளப்பிவிட ஒரு வலுவான அரசியல் காரணம் இருக்கிறது...இந்த குற்றச்சாட்டு எங்களைக் குறிவைத்தல்ல! தி.மு.க.வை குறிவைத்து கிளப்பிவிட பட்டுள்ளது.
அதாவது தி.மு.க.வோடு விடுதலைச்சிறுத்தைகள் உள்ளிட்ட கணிசமான கட்சிகள் இணைந்து அரசியல் பணியாற்றுகின்றன. இந்த நேரத்தில் இப்படியொரு பிரச்னையை கிளப்பிவிட்டு தி.மு.க.வுக்கும், வி.சிறுத்தைகளுக்கும் இடையில் கலகம் விளைவிப்பதே இவர்களின் இலக்கு. இப்படி கலகத்தை விளைவித்தால், தி.மு.க.வோடு விடுதலைச்சிறுத்தைகளால் தொடர்ந்து பயணிக்க முடியாது, இவர்களை வெளியேற்றிவிட்டு தி.மு.க.வை பலவீனப்படுத்தி வீழ்த்தலாம் என நினைக்கிறார்கள். ஆனால் மதவாத சக்திகளின் இந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. ” என்று சொல்லியிருக்கிறார்.
திருமாவின் இந்த வார்த்தைகள் தி.மு.க.வின் சீனியர் நிர்வாகிகளுக்கு எரிச்சலைக் கிளப்பியிருக்கின்றனவாம். காரணம்? கடந்த பொதுத்தேர்தலில் மக்கள் நல கூட்டணி என ஒன்றை துவங்கி, தி.மு.க.வின் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை கெடுத்தவர்களில் முக்கியமானவர் திருமாவளவன் என கடுப்பில் இருந்தனர் தி.மு.க.வினர். இந்நிலையில் ஜெ., மரணத்துக்குப் பின் திருமாவே வலிய வந்து தி.மு.க.வோடு இணைந்திருக்கிறார். இணைந்தவர் சும்மா இல்லாமல் இந்து ஆலயங்கள் விஷயத்தில் சென்சிடீவாக பேசி வைக்க, அது இந்துக்களின் வாக்கு வங்கியை திருமா ஒட்டியிருக்கும் தி.மு.க. கூடாரத்துக்கு எதிராக மாற்றியிருக்கிறது என்பதுதானாம்.
தங்கள் கட்சியின் அரசியல் வாழ்க்கைக்காக வந்து ஒட்டிக் கொண்டவர் இப்போது ‘விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றிவிட்டு தி.மு.க.வை பலவீனப்படுத்த மதவாதசக்திகள் திட்டம்’ என்று திருமா சொல்வதைப் பார்த்தால் என்னமோ இவரால்தான் நமது கட்சிக்கே பலம் வந்திருப்பதைப் போல பேசுகிறாரே! தளபதியின் காதுகளுக்கு இந்த விஷயம் போய், அவர் டென்ஷனாகிவிட்டார்! என்று கொதிக்கிறது அறிவாலய டீம் ஒன்று.
மேலும் திருமாவை கருணாநிதி தனது மகன் போல் பார்த்துக் கொண்டார் என்பார்கள். ஆனால் ஸ்டாலினுக்கு திருமாவை அறவே ஆகாது. திருமாவும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ஸ்டாலினை விமர்சனங்களால் புரட்டி எடுத்தவர். அப்பேர்ப்பட்டவர் இன்று அரசியல் ஆதாயத்துக்காக ‘தளபதி! தளபதி!’ என்று சொல்லி ஒட்டி நிற்கிறார். வந்தவர் இப்படி வினையையும் இழுப்பதை ஸ்டாலின் ரசிக்கவேயில்லை என்று பொங்குகிறார்கள் தி.மு.க.வின் உச்ச நிர்வாகிகள்.
இதன் மூலம் இந்துக்களின் வாக்கு வங்கியை எந்தளவுக்கு நாத்திக தி.மு.க. நம்பி நிற்கிறது என்பது தெளிவாக புரியுமே! என சொல்லி சிரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.