
ஆர்.கே.நகர் தொகுதியில், ஆளுங்கட்சி, தினகரன் தரப்பு நூதன முறையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக மட்டும்தான் வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ எதுவும் கொடுக்காமல் தேர்தலை சந்திக்கிறது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, அதிமுக, திமுக, டிடிவி தினகரன், உள்ளிட்டோர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த முறை, ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரமும் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் பலத்த கண்காணிப்பையும் மீறி, தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
ஆர்.கே.நகரில் இதுவரை பல இடங்களில் பணப்பட்டுவாடா நடந்து உள்ளதாகவும், இதற்கு போலீசார் உடந்தையாக இருந்துள்ளதாகவும் தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி தரப்பில் இருந்தும், டிடிவி தினகரன் தரப்பில் இருந்தும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
‘
ஆனாலும், பல்வேறு வகைகளில் தொகுதி மக்களுக்கு பண பட்டுவாடா நடத்தப்படுவதாக தெரிகிறது. ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் சேட்டுக்கடையில் அடகு வைத்திருக்கும் பொருட்களின் சீட்டைக் கொடுத்தால், அதனை தினகரன் ஆதரவாளர்கள் மீட்டு கொடுத்து விடுவார்களாம். பலருக்கு டோக்கன் வழங்கப்பட்டு குறிப்பிட்ட கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள சொல்லியுள்ளனர்.
எவ்வித சத்தமும் இல்லாமல், ஆளுங்கட்சி, டிடிவி தினகரன் தரப்பு போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களுக்கு பணத்தை வாரி வழங்கி வருகின்றனர். ஆனால், இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணமோ, பொருளோ எதுவும் கொடுக்காமல் திமுக தேர்தலை சந்தித்து வருகிறது.