
குஜராத் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், மக்களின் அளித்த வாக்குகள் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு சில உண்மைகளை உணர்த்தி உள்ளன.
ஆங்கில நாளேடான “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆய்வின்படி, பா.ஜனதா கட்சி எதிர்பார்த்தபடி, நகர்புறங்களில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது, ஆனால், கிராமப்புறங்களில் மக்கள் அந்த கட்சியை பெரும்பாலும் புறக்கணித்துவிட்டனர். அந்த பகுதிகளை எல்லாம் காங்கிரஸ் கட்சி ஆக்கிரமித்துவிட்டது.
குஜராத் தேர்தலைப் பொருத்தவரை, பா.ஜனதா கட்சி தற்போது 73 நகர்புற தொகுதிகளில் போட்டியிட்டு 55 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ 18 இடங்களில் மட்டுமே வெற்றிவாய்ப்புடன் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சி வசம் இருந்த, 5 நகர்புற தொகுதிகளை ஆளும் பா.ஜனதா கட்சி கைப்பற்றி இருக்கிறது. குறிப்பாக ஜாம்நகர்வடக்கு, ராஜ்கோட் தெற்கு, ராஜ்கோட் கிழக்கு, மேமதாபாத், ஹிமாத்நகர், சனானத் ஆகிய நகரங்களில் பிரதமர் மோடி மிகப்பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்தி பிரசாரம் செய்தார். அதற்கு நல்லபலனும் கிடைத்துள்ளது.
இதைபோல, சிறிய நகரங்களைக் கொண்ட தொகுதிகளிலும் பா.ஜனதா கட்சி கூடுதலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் பிரசாரத்தால், நகரங்களை உள்ளடக்கிய தொகுதிகளிலும், சிறு நகரங்களைக் கொண்ட தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு அதிகமான வாக்குகள் கிடைத்து இருக்கின்றன.
காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை கிராமப்புற தொகுதிகளான 109 இடங்களில் 62 இடங்களில் முன்னணி நிலையில் இருக்கிறது. இங்கு வெற்றி பெறவும் வாய்ப்புகள் அதிகம். காங்கிரஸ் கட்சி கிராமப்புறங்களில் கூடுதலாக 22 இடங்களை இந்த தேர்தலில் கைப்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாகும்.
அதேசமயம், பா.ஜனதா கட்சி 43 தொகுதிகளில் பின்தங்கி வருகிறது. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் மீது இருந்த அதிருப்தியால் மக்கள் 3 சுயேட்சை வேட்பாளர்களுக்கு வாக்களித்து இந்த முறை வெற்றி பெற வைத்துள்ளனர்.
இந்ததேர்தலில் பா.ஜனதாவுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக இருந்த பட்டிதார் இனத்தவர்கள், சரிசமமாக பிரிந்து காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜனதா கட்சிக்கும் வாக்களித்துள்ளனர். அதாவது, நகர்புறங்களில் வசித்த படேல் இனத்தவர்கள் பா.ஜனதாவுக்கும், கிராமப்புறங்களில் வசித்துவரும் படேல் இனத்தவர்கள் காங்கிரஸ் கட்சிக்கும் வாக்களித்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக குஜராத்தின் வடபகுதி, சவுராஷ்டிரா, கட்சுபகுதிகளில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை உயர்த்தியுள்ளது. இந்த மண்டலங்களில் பா.ஜனதா கட்சி 17 இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி 30 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதேசமயம், பா.ஜனதா கட்சி மத்திய குஜராத், குஜராத்தின் தென்பகுதிகளில் செல்வாக்கை வளர்த்துஉள்ளது.
இப்போதுவரை தேர்தல் ஆணையத்தின் முடிவுகளின்படி, மொத்தம் உள்ள 182 இடங்களில், பா.ஜனதா கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றதாகவும், காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் வென்றதாகவும் அறிவித்துள்ளது. பா.ஜனதா கட்சி 37 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும் முன்னணயில் உள்ளனர். ஆட்சி அமைக்க 93 எம்.எல்.ஏ.க்கள் தேவை.