
ஆகஸ்ட்டு-17 விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாள் விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அமைச்சர்: சமுதாயத்திற்காக தன் வாழ் நாளெல்லாம் உழைக்கும் எழுச்சித்தமிழரை சிறுபான்மையின மக்கள் சார்பாகவும், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், மக்கள் முதல்வர் ஸ்டாலின் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று வாழ்த்தினார். திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர் ரஹ்மான் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
அப்துர் ரஹ்மான்; திருமாவளவனின் கருத்துக்களை எங்களை விட ஆழமாக யாராலும் சொல்லிவிட முடியாது, வீரமிக்க தமிழனாக திருமா திகழ்வது பேரானந்தத்தை தருகிறது. சனாதனம் என்னும் சொல்லை திருமாவை விட உரத்த குரலில் எதிர்த்தவர் எவருமில்லை, தமிழர்களின் மானத்தை எழுச்சி பெற செய்யும் அவர் நீடித்து வாழ வேண்டும்.திருமாவளவனின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் முதல் வாய்ப்பு எனக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன் என்றார்.
பீட்டர் அல்போன்ஸ்:
52 ஆண்டுகளாக தமிழக அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். பல தலைவர்களை பார்த்து இருக்கிறேன், படித்து இருக்கிறேன், காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியதால் கலைஞர் அவர்களை பார்க்கும்போது எல்லாம் எனக்கு வயிறு பற்றி எரியும், ஆனால் 50 ஆண்டுகளுக்கு பின்னர்தான் தெரிந்து கொண்டேன் கலைஞர் ஒரு தீர்க்கதரிசி என்று, தேர்தல் அரசியல் என்பது திருடர்கள் பாதை என்று பிரச்சாரம் செய்த திருமாவளவன் இன்று பெரும் தலைவராக உயர்ந்து இருக்க நானும் காரணமாக இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.
இந்தியாவில் இன்று நல்ல தலைவர்களுக்கு தான் மிகப்பெரிய பஞ்சமாக உள்ளது, அழுக்கு சட்டை போட்டவர்களை தலைவன் ஆக்குகிறார் திருமாவளவன். கசக்கின்ற கருப்பை இன்று கவர்ச்சிகரமான கருப்பாக மாற்றி வைத்திருக்கிறார் திருமாவளவன். தமிழ் சமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்கள் அதிகாரம் பெற வேண்டும் அதன் முதல் தளபதியாக தம்பி திருமா வர வேண்டும். அது விரைவில் நடக்கும். அதனை நாம் பார்க்கத்தான் போகிறோம். ஆதிக்க வெறி எங்கே இருந்தாலும் அதை தடுத்து நிறுத்தி இங்கே உங்கள் பறுப்பு வேகாது என்று சொல்லுவோம் என்றார்.
கி.வீரமணி: 50 ஆண்டுகளில் மக்களுக்கு புரிய வைக்க வேண்டியதை 5 ஆண்டுகளில் செய்யக்கூடியவர் திருமாவளவன் சரித்திரத்தை திருப்பி போடுபவர் திருமா உங்களை எப்போதும் தோளில் தூக்கி சுமக்க நாங்கள் இருக்கிறோம்.. சமத்துவத்தை சரித்திரமாக்குங்க என்றார்.
கருபழனியப்பன்: திருமாவளவன் நாற்காலியில் உட்காருவது தான் அவர்களுக்கு எல்லாம் பிரச்சினை, அதனால் தான் அவர் உட்காருவதையே பிரச்சனையாக்குகிறார்கள், தன் கருத்தை பிறர் மனம் கோனாமல் பேசும் தலைவன் திருமாவளவனை தவிர வேறு யாரும் இல்லை. தோல்வியை தன் மீது ஏற்றுக்கொள்வதும்,
வெற்றியை தொண்டனுக்கு கொடுப்பதுமான ஆற்றலில் பேரறிஞர் அண்ணாவை போல பார்க்கிறேன், அண்ணாவின் இடத்தை ஸ்டாலின் நிரப்புகிறார், கலைஞரின் இடத்தை திருமாவளவன் நிரப்புகிறார்.காலத்தை தாண்டி சிந்திக்கும் தலைவன் திருமா காலம் தாண்டி நீடுழி வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.