கொரோனா சிகிச்சைக்கான மொத்த செலவையும் அரசே ஏற்க வேண்டும்..!! திருமாவளவன் தலைமையிலான போராட்ட குழு அதிரடி..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 8, 2020, 10:40 AM IST
Highlights

கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில்,  தமிழக அரசு மற்றும் ஐஎம்ஏ  பரிந்துரையில் லட்சக்கணக்கில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

கொரோனா சிகிச்சைக்கான செலவு முழுவதையும் அரசே ஏற்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கான முதல் பருவக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கொரோனா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் லட்சக் கணக்கில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில்,  தமிழக அரசு மற்றும் ஐஎம்ஏ  பரிந்துரையில் லட்சக்கணக்கில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துவதாக கூறி கொள்ளை கட்டணத்தை அரசே நிர்ணயித்துக் கொடுப்பது கண்டிக்கத்தக்கது.கொரோனாவை தேசிய பேரிடராக அறிவித்துள்ள நிலையில், அந்த பேரிடரின் அனைத்து வகையான பாதிப்புகளிடமிருந்தும் நாட்டு மக்களை பாதுகாப்பது அனைத்து மக்கள் நலன் அரசின் கடமையாகும். ஆகவே,  கொரோனா சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும்.

தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்த சூழலில் தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பையும் அரசு பெற்று மக்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய நேரத்தில், கட்டணங்களை நிர்ணயித்து, பேரிடர் சேவையை வர்த்தக சேவையாக மாற்றுவது ஏற்புடையதல்ல. ஆகவே கொரோனா சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டும். தலைநகர் சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மக்களுக்கும் பி.சி.ஆர். பரிசோதனையை இலவசமாக்க வேண்டும். தனியார் பரிசோதனை மையங்களிலும் அரசின் இலவச சேவையை தொடர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம். பள்ளி, கல்லூரிகளுக்கான முதல் பருவக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும்: கொரோனா பேரிடர் ஊரடங்கு நடவடிக்கை காரணமாக பள்ளிக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் பயிற்சி என்ற பெயரில் கட்டாய பண வசூல் பல்வேறு இடங்களில் அரசின் எச்சரிக்கையை மீறி நடைபெற்று வருகின்றன. 

மேலும், பல தனியார் பள்ளிகள் முதல் பருவக் கட்டணங்களை  செலுத்த பெற்றோர்களை சில மிரட்டல்களுடன் நிர்பந்தித்து வருகின்றன. தங்கள் பிள்ளைகளின் எதிர்கால  கல்வியை கருத்தில்கொண்டு பெற்றோர்கள் பலரும் பள்ளிகளின் மிரட்டல்களுக்கு பணிந்து கட்டணங்களை செலுத்த முன்வந்தாலும், வேலை இல்லாமல் வருமானம் இன்றி தவித்து வரும் பல பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். ஆகவே, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான முதல் பருவக் கட்டணங்களை ரத்து செய்து அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என, கொரோனா விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு தலைவர் தொல்.திருமாவளவன்,த.செ.கொளத்தூர் மணி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா,தமிழர் வாழ்வுரிமை கட்சி தி.வேல்முருகன், கு.ராமகிருட்டினன்,தெஹ்லான் பாகவி, திருமுருகன் காந்தி, கே.எம்.சரீப் ,இனிகோ இருதயராஜ், வன்னி அரசு,நெல்லை முபாரக், அப்துல் சமது,பெரியார் சரவணன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். 
 

click me!