
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும், டி.டி.வி.தினகரன் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது சசிகலாவின் சகோதரர் திவாகரன் தனி அணியாக செயல்படப் போவதாக தெரிவித்துள்ளார். தினகரனுடன் இணைந்து செயல்பட முடியாது என்றும் அம்மா அணி என்ற பெயரிலேயே செயல்பட்டு தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் திவாகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. இந்நிலையில்தான் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அதிமுக இபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும், தினகரன் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வந்தது.
ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் விதமாக தமிழகம் முழுவதும் ஒரே சின்னம் வேண்டும் என்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக கழகம் என்ற புதிய அணியை தினகரன் தொடங்கினார்.
இந்நிலையில்தான் தினகரன் தரப்பிற்கும், சசிகலாவின் சகோதரர் திவாகரன் குடும்பத்துக்கும் இடையே இருந்து வந்தமோதல் தற்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த மோதல் முகநூல் மற்றும் டுவிட்டர் வழியாக வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது.
இந்நிலையில் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் , அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது. அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தை தினகரன் துவங்கியதை நாங்கள் ஏற்கவில்லை. இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டேன் என்று தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தினகரன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நானும் எனது மகனும் ஈபிஎஸ் அணியில் இணைய உள்ளதாக தவறான தகவலை பரப்புகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வெற்றிவேல், செந்தில்பாலாஜி கட்சிக்கு இடையில் வந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். தேவைப்பட்டால் தேர்தலில் தனித்து நிற்போம். அதிமுகவின் சுவடே இருக்க கூடாது என தினகரன் நினைக்கிறார். திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை நாங்கள் ஏற்க முடியாது என திவாகரன் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.