ஆக்ஸிஜன் அளவு 94 சதவீதம் இருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு வரக்கூடாது.. தமிழக அரசு புதிய வழிகாட்டு நெறிமுறை.

By Ezhilarasan BabuFirst Published Jun 1, 2021, 10:51 AM IST
Highlights

அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, ஆக்ஸிஜன் அளவு 94 இருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு வரக்கூடாது. மாறாக வீடுகளிலேயே அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

கொரோனா சிகிச்சைக்கான பின்பற்றப்பட வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள் அடங்கிய அரசாணையை மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. 37 மாவட்டங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை பாதியாக சரிந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 27 ஆயிரத்து 936 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மொத்தம் 20 லட்சத்து 96 ஆயிரத்து 516 ஆக அதிகரித்துள்ளது. 

இதேபோல் நேற்று ஒரே நாளில் 478 பேர் உயிரிழந்த நிலையில்  தமிழகத்தில் இதுவரை உயரிழந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 232 ஆக அதிகரித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு நல்ல பலனைக் கொடுத்துள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், நோய்த்தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக பின்பற்ற வேண்டிய முழுமையான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது. அதாவது, அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, ஆக்ஸிஜன் அளவு 94 இருந்தால் அவர்கள் மருத்துவமனைக்கு வரக்கூடாது.  

மாறாக வீடுகளிலேயே அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஆக்ஸிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருப்பின், அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் அளவு 90-க்கு கீழாக இருப்பின், அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல் 3 வகைகளாக நோயாளிகளைப் பிரித்து சிகிச்சையைத் தொடர வேண்டும் எனவும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 
 

click me!