சென்னையை கோட்டையாக வைத்திருப்பதாக சொன்னார்கள்.. ஆனால் ஓட்டையாக இருக்கிறது.. அண்ணாமலை நக்கல்.

By Ezhilarasan BabuFirst Published Nov 9, 2021, 5:33 PM IST
Highlights

குறிப்பாக மழைக்காலத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தீவிரமாக மக்களுக்கான பணியில் இறங்கி இருக்கிறார்கள், அது குறித்து குறை சொல்வதற்கு ஏதுமில்லை என்றார்.

பெய்து வரும் தொடர் கன மழையில் தமிழக அரசும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்கள்  மக்களுக்கான பணியில்  தீவிரமாக இறங்கியுள்ளனர், அதைப் பற்றி குறை சொல்வதற்கு ஏதுமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாக உள்ளது,  எனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே ஐந்தாயிரம் ரூபாயை தமிழக அரசு கொடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார் . வடகிழக்கு பருவமழை சென்னையில் மிகத் தீவிரமாக பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மற்றும் என்றும்  இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11-ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதலிய கன மழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்து 5 தினங்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று தினங்களாக இரவு பகலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியுள்ளது. அதை தமிழக முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள் நேரில் சென்று ஆய்வு செய்து மக்களுக்கான நிவாரண பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தி பிரசார சபாவில் பிரதமர் மோடி கிச்சன் திறந்து வைத்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி மக்களுக்கான சேவை செய்வதில் முழுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருக்கிறது என்றார், மோட்டார் மூலமாக ஆங்காங்கே தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதேபோல உணவு பொட்டலத்தை வழங்க வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார்கள், அதற்காக இந்த சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறோம் என்றார். குறிப்பாக மழைக்காலத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தீவிரமாக மக்களுக்கான பணியில் இறங்கி இருக்கிறார்கள், அது குறித்து குறை சொல்வதற்கு ஏதுமில்லை என்றார். அதேநேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை என்றார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெளியே செல்ல முடியாத நிலைமையில் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக மாநில அரசு 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். 

சென்னை வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் அண்ணாமலை கட்சி தொண்டர்களுடன் இன்று ஆய்வு செய்தார், மேலும் அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டு கருத்து பதிவிட்டுள்ளார், இது மக்கள் வாழ்விடமா? அல்லது  மழைக்கால ஏரியா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், இத்தனை ஆண்டுகள் சென்னையை தங்கள் கோட்டையாக வைத்திருப்பதாக கூறிக் கொள்பவர்கள் இத்தனை ஓட்டையாக வைத்திருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலையும், அத்தியாவசியமான பொருட்களையும் வழங்கி வந்தேன் என பதிவிட்டுள்ளார். 
 

click me!