ஸ்மார்ட் சிட்டி விவகாரம்… விரைவில் விசாரணை… ஸ்டாலின் அதிரடி!!

By Narendran SFirst Published Nov 9, 2021, 5:33 PM IST
Highlights

மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் கடந்த 6 ஆம் தேதி இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்ததை அடுத்து சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் பல பகுதிகளில் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து வெள்ள நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிகாரிகள் பலர் இரவு பகல் பாராது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர் அதிகம் தேங்கியுள்ள பகுதிகளில் ராட்சத மோட்டர்கள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது. இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூரில் உள்ள சுப்பிரமணிய தோட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். பின்னர் கோபாலபுரம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருக்க கூடிய மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்மார்ட் சிட்டி குறித்த எடப்பாடி பழனிசாமியின் கருத்து பற்றி விளக்கம் அளித்தார். ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி என்ற திட்டத்தை போட்டு, மத்திய அரசிடம் இருந்து நிதியை வாங்கி என்ன செய்தார்கள் என தெரியவில்லை என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு விசாரணை நடத்தப்படும் என்றும் வேலுமணி தலைமையிலான உள்ளாட்சித்துறையில் எதுவுமே சரியாக நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினார். சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு தங்க வைப்பதற்காக 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய சமையலறைகள் 15 இடங்களில் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அம்மா உணவங்கள் மூலமும் உணவு தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்கள் உணவு வழங்கப்பட்டுள்ளது என்றும் நகராட்சியின் 200 வார்டுகளிலும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உணவினை வழங்க வருவாய்த்துறை சார்பில் வரி வசூலிப்பவர் அல்லது உரிம ஆய்வாளர் 200 பேர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தேவைப்பட்டால் ஒவ்வொரு வேளையும் சுமார் ஒன்றரை லட்சம் நபர்களுக்கு வழங்கக்கூடிய அளவுக்கு உணவு சமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழைக்காலம் முடியும் வரை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

click me!