தேவர் மகன் 2' பற்றி அரசியல் அனாதை கிருஷ்ணசாமி பேசுவதா? கருணாஸ் கொதிப்பு...!

By vinoth kumarFirst Published Nov 9, 2018, 12:38 PM IST
Highlights

உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம். யாரும் தடுக்க போவதில்லை என கூறிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம். யாரும் தடுக்க போவதில்லை என கூறிய முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.

முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, வெளியிட்ட அறிக்கையில் கமல்ஹாசன் தேவர் மகன்-2 படம் எடுக்கப்போவதாகவும், அப்படி எடுத்தால் அப்படம் முடங்கும் எனவும் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் யார் என்ன படம் எடுப்பது, என்ன பெயர் வைப்பது என்பதை கதாநாயகனும், தயாரிப்பாளரும் முடிவு செய்வார்கள் தவிர நீங்கள் இல்லை. 

தேவர் மகன் படத்தால் தென் தமிழகத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டதாக கூறியிருந்தீர்களே... ஏதேனும் இரு சமூகத்திடையே கலவரம் வரும் மாதிரி எந்த ஒரு காட்சியாவது அப்படத்தில் இருக்கிறதா? தேவர் மகன் படம் என்பது கிராமத்தில் இரு குடும்பத்தினரிடம் உள்ள பகையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். அதில் கூட இறுதி காட்சியில் அனைவரும் பிள்ளைகளை படிக்க வைக்க சொல்லி அறிவுரையே வழங்கியிருப்பார் கமல்ஹாசன். 

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் கூட தன் சாதியினரை உயர்வாக படம் எடுக்கலாம் தவிர எந்த சாதியையும் குறைத்து படம் எடுக்க கூடாது என கூறியிருந்தார். அதன்படி பார்த்தால் சமீபகாலமாக சில டைரக்டர்கள் தேவர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாகவே படம் எடுக்கின்றனர். அச்சமயம் தங்களை போன்றவர்கள் வாயை பொத்திக்கொண்டு இருப்பது ஏன்? 

தேவர் மகன் படத்தின் காரணமாக 25 ஆண்டுகளாக இரு சமூகத்தினரிடையே பகை தீராமல் இருப்பதாக பொய்யான கருத்தை விதைக்கும் நீங்கள் 1957-ல் இருந்த காங்கிரஸ் அரசு இரு சமூகத்தினரிடையே தீராத பகையை ஏற்படுத்த காரணமாக இருந்ததை பற்றி பேச திராணி இருக்கிறதா? உங்களுக்கு...

 

புராண கதைகளில் உள்ள வீரவாகுத்தேவர், புலித்தேவன், வெள்ளையத்தேவன், ரீபெல்முத்து ராமலிங்க சேதுபதி, வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், பசும்பொன் திருமகனார் உட்பட பல வரலாற்று பெருமைகளுக்கு சொந்தக்காரர்களான எங்களை பற்றி அக்காலம் முதல் இந்த யுகம் இருக்கும் வரை திரைப்படங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். உங்களுக்கு ஏதாவது வரலாறு இருந்தால் தாங்களும் படம் எடுக்கலாம். யாரும் தடுக்க போவதில்லை.

 

தற்சமயம் அரசியல் அனாதையாக இருக்கும் தாங்கள் மாஞ்சோலை தொழிலாளர்கள் சம்பவத்தை வைத்து அரசியல் செய்ததது போல் தேவர் மகன்-2 படத்தை வைத்து தங்களை சாதி தலைவராக காட்டவும், தங்கள் சுயலாபத்திற்காக நீங்கள் சார்ந்த சாதியினரை பலிகடாவாக்க நினைப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.இவ்வாறு கருணாஸ் கூறியுள்ளார்.

click me!