
தீபாவளிக்கு வெளியான விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப்படத்தில் அதிமுக அரசின் திட்டங்களை கேவலப்படுத்துவது போன்று காட்சிகள் இருப்பதாகவும், வில்லி கேரக்டரில் நடித்துள்ள வரலட்சுமியின் பெயர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஒரிஜினல் பெயர் என்றும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் சர்கார் ஓடும் திரையரங்குகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சர்கார் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த பழ.கருப்பையா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது சர்கார் படத்தில் இடம் பெறும் காட்சிகள் குறித்து விளக்கம் அளித்தார். தற்போது நடைபெறும் அரசியல்தான் இந்தப் படத்தில் காட்சிகளாக்கப் பட்டுள்ளதாக கூறினார். இலவசம் என்பது மக்களை சோம்பேறிகளாக்கும் என்றும், பொது மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை தங்களது வருமானத்திலேயே வாங்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதைச் செய்வதுதான் அரசின் கடமை என்றும் கூறிய பழ.கருப்பையா, காமராஜர் ஆட்சிக்காலத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கியதைப் போன்ற இலவசங்கள் மட்டுமே உண்மையானது எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து சர்கார் படத்தின் வில்லியாக நடித்திருக்கும் வரலட்சுமியின் பெயர் கோமளவள்ளி என உள்ளது. அந்தப் பெயர் ஜெயலலிதாவின் ஒரிஜினல் பெயர் என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பழ.கருப்பையா, கோமளவள்ளி என்பது ஜெயலலிதாவின் ஒரிஜினல் பெயர் கிடையாது என்றும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வைத்த பெயர் அது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதைத் தொடர்ந்து ஆவேசமான பழ.கருப்பையா, வரலட்சுமி நடித்த அந்த கேரக்டருக்கு ஜெயலலிதா என்றே பெயர் வைத்திருந்தாலும் அது தப்பில்லை என குறிப்பிட்டார். பழ.கருப்பையாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.