
நாட்டின் மிகப்பெரிய வில்லங்க பேர்வழிகள் ஆளுநர்களும் துணைநிலை ஆளுநர்களும்தான் என புதுச்சேரி முதல்வர் கடுமையாக விமர்சித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், இடதுசாரிக் கட்சிகளின் மாநில செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மத்திய அரசிடம் அதிகாரம் குவிந்துள்ளதாகவும் மாநிலங்களின் உரிமைகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் வேண்டும் எனவும் மாநிலங்களுக்கான உரிமைகளை வழங்குவதன் மூலம்தான் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசினர்.
மாநாட்டில் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, ஆளுநர்களைக் கடுமையாக விமர்சித்து பேசினார். ஆளுநர்களும் துணைநிலை ஆளுநர்களும் நாட்டின் வில்லங்க பேர்வழிகள் என நாராயணசாமி விமர்சித்தார்.
பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் புதுச்சேரியில் அரசுக்கு குடைச்சல் கொடுத்துவரும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை சுட்டிக்காட்டி நாராயணசாமி விமர்சித்தார்.
ஆளுநரையும் துணைநிலை ஆளுநரையும் வைத்துக்கொண்டு தமிழகமும் புதுச்சேரியும் அல்லோல்படுவதாகவும் மத்திய அரசின் ஏஜெண்டுகளாக ஆளுநர்கள் செயல்படுவதாக தெரிவித்தார்.