
அனைத்து மாநில முதல்வர்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க மத்திய அரசு நினைப்பதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டில் பேசிய ஸ்டாலின், அதிகாரங்களைத் தன்னகத்தே குவிப்பதாக மத்திய அரசை விமர்சித்தார்.
மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். பாஜக ஆட்சியில் இல்லாத மாநில முதல்வர்களைக் கூட தன் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என மத்திய அரசு நினைக்கிறது. மாநில முதல்வர்களை தலையாட்டி பொம்மைகளாக வைத்திருக்க மத்திய பாஜக அரசு நினைக்கிறது. மாநிலங்களின் உரிமைகள் அனைத்தையும் மத்திய பாஜக அரசு பறிக்கிறது. மாநில உரிமைகளை மீட்டே தீரவேண்டும்.
இவ்வாறு மாநில உரிமைகளை மீட்பது தொடர்பாகவும் மாநில சுயாட்சி தொடர்பாகவும் மத்திய அரசை விமர்சித்து ஸ்டாலின் பேசினார்.