டோல்கேட்டுகளே இருக்காது... மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வெளியிட்ட அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Dec 18, 2020, 4:03 PM IST
Highlights

இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கச்சாவடிகளே இருக்காது என  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
 


இந்தியாவில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கச்சாவடிகளே இருக்காது என  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பின் நிறுவன வாரத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தேசிய உள்கட்டமைப்பின் பங்கு என்ற தலைப்பில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசினார். அப்போது, ‘’நாடு முழுவதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக சுங்கச்சாவடிகளில் ஜிபிஎஸ் அடிப்படையிலான தொழில்நுட்பப் பயன்பாட்டை அரசு இறுதி செய்துள்ளது. தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக ஜிபிஎஸ் முறையிலான கட்டண சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

இதன் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுங்கச்சாவடி இல்லாத இந்தியா உருவாகும். புதிய ஜிபிஎஸ் சிஸ்டம் மூலம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இன்றி வேகமாக செல்ல முடியும். முற்றிலும் புதிய கட்டண முறைக்கு அரசு அனுமதி அளித்து இருக்கிறது. வாகனங்களின் இயக்கத்தைப் பொறுத்து சுங்கக்கட்டணம் வாகன ஓட்டிகளின் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளப்படும்.

தற்போது அனைத்து பயணிகள் மற்றும் வர்த்தக வாகனங்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் கட்டாயம் வழங்கப்படுகிறது. எனினும், பழைய வாகனங்களில் இந்த வசதி வழங்கப்படவில்லை. இதற்காக அரசாங்கம் மாற்று முறைகளை அறிவிக்கும். வரும் மார்ச் மாதத்திற்குள் சுங்கச்சாவடிகளின் மூலம் ரூ.34,000 கோடி கிடைக்கும். சுங்கக் கட்டணத்தை வசூலிக்க ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதன் வாயிலாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1,34,000 ரூபாய் கிடைக்கும்’’என அவர் தெரிவித்தார். 
 

click me!