வேலை,வெட்டி இல்லாமலா சட்டமன்றம் வந்திருக்கிறோம்..! சட்டப்பேரவையில் அமைச்சருக்கு எதிராக கொந்தளித்த எடப்பாடி

By Ajmal Khan  |  First Published Apr 11, 2023, 3:17 PM IST

பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் காந்தியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி வேலை,வெட்டி இல்லாமலா சட்டமன்றம் வருகிறோம் என ஆவேசமாக பேசினார்.


திமுக- அதிமுக மோதல்

தமிழக சட்டப்பேரவையில் இன்று விளையாட்டுத்துறை, கைத்தறித்துறை உள்ளிட்ட மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசுகையில், 2023 ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தவில்லையென்றும்,மக்களுக்கு உரிய முறையில் வேட்டி. சேலைகள் வழங்கப்படவில்லையென தெரிவித்தார். மேலும் நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தரமான நூல் வழங்காததன் காரணமாக  வேட்டி, சேலை வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விமர்சித்தார். இதற்கு பதில் அளித்த கைத்தறித்துறை அமைச்சர் காந்தி இலவச வேட்டி,சேலை திட்டம் தொடர்பான  இந்த கேள்வியை அதிமுகவினர் தவிர யார் வேண்டுமானலும் கேட்கலாம். 2012, 2016 அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வேட்டி, சேலை தரம் குறித்து யாராவது பேச முடியுமா ? என குற்றம்சாட்டினார்.

Tap to resize

Latest Videos

காந்தியின் பேச்சுக்கு அதிமுக எதிர்ப்பு

அமைச்சர் காந்தியின் இந்த பேச்சுக்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். இதன் காரணமாக சட்டமன்றத்தில் பதற்றமான சூழல் உருவானது. இதனையடுத்து பேசிய  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஏற்கனவே இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பிப்ரவரி மாதத்திற்குள் வேட்டி சேலை வழங்கி முடிக்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்திருந்தார்.  அதை தற்போது கேட்கும் போது பதில் சொல்ல முடியாது என்றால் எதற்காக இலாகா வைத்துள்ளீர் என ஆவேசமாக பேசினார்.  அப்போது குறுக்கிட்ட பேரவைத்தலைவர் அப்பாவு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு உரிய பதிலை அமைச்சர் வழங்கினால் போதுமானது. ஏன் தாமதம் என உறுப்பினர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் வழங்கினால் போதுமானது என மீண்டும், மீண்டும் அறிவுறுத்தினார். 

ஆவேசமடைந்த இபிஎஸ்

தொடர்ந்து பேசிய மூத்த அமைச்சர் எ.வ.வேலு வேட்டி, சேலை இன்னும் வந்து சேரவில்லை என ராஜன் செல்லப்பா எழுப்பிய  கேள்விக்கு அதிமுக ஆட்சியிலும் தாமதமாக வழங்கப்பட்டதையே அமைச்சர் பதிலாக சொன்னார். வேறு எதுவும் தவறாக பேசவில்லை என கூறினார். மீண்டும் பேசிய  எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் பிரச்னையை பற்றி பேசதான் பேரவைக்கு வந்துள்ளோம். வேலை, வெட்டி இல்லாமல் வெட்டியாகவா அமர்ந்துள்ளோம். மக்கள் பிரச்னையை அதிமுகவினர் பேசாவிட்டால் வேறு யார் பேசுவது ? என ஆவேசமாக கூறினார். இதனையடுத்து அவை முன்னவர் துரைமுருகன் குறுக்கிட்டு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்விக்கு அமைச்சர் பதில் சொல்வார். அதோடு விடுங்கள். வேறு யாரும் பேச வேண்டாம் என சமாதானம் செய்து வைத்தார். இதன் காரணமாக சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படியுங்கள்

அண்ணாமலை பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கி பணம் வசூல்..! எச்சரிக்கை விடுத்த பாஜக

click me!