மோடி வரும் போது ஒரு டாஸ்மாக் கடைகூட இருக்க கூடாது.. குடிமகன்களுக்கு ஷாக் கொடுக்க அர்ஜூன் சம்பத்.

Published : Jan 07, 2022, 12:40 PM IST
மோடி வரும் போது ஒரு டாஸ்மாக் கடைகூட இருக்க கூடாது.. குடிமகன்களுக்கு  ஷாக் கொடுக்க அர்ஜூன் சம்பத்.

சுருக்கம்

பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில், மத்திய அரசின் உளவுத்துறை, தமிழக உளவுத்துறை மோடியின் வருகையை ஒட்டி கண்காணித்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். 

ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். சாராய ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கும் திமுக அரசு ஏன் 'கள்' கடைகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு அதிரடி நடவடிக்கை அரசு எடுத்து வருகிறது. அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். கொரோனா, மழை வெள்ளம் போன்ற காலங்களில் அரசு செயல்பட்ட விதம்  மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. அதே நேரத்தில் அதிமுக, பாஜக ஆகிய எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் உண்மையான எதிர்க்கட்சி பாஜகதான் என்று பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காகவே அதிமுகவைவிட ஒரு படி மேலே போய் பாஜகவினர் திமுகவை விமர்சித்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும்  புகழ்ந்து பாராட்டி வருகிறார். இது அதிமுக மற்றும் பாஜக தரப்புக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதே நேரத்தில் வரும் 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்க வருகை தர உள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டி மோடியை திமுக அவமதித்தது. அப்படிப்பட்ட திமுக தற்போது ஆளும்கட்சியாக உள்ள நிலையில் பிரதமரை வரவேற்று கவுரவிக்க இருப்பது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பிரதமர் மோடி வரும் போது யாரும் தேவையில்லாமல் சமூகவலைத்தளத்தில் பாஜகவுக்கு எதிராகவோ, பிரதமர் மோடிக்கு எதிராகவோ கருத்துக்களை தெரிவிக்க கூடாது என  தனது கட்சி தொண்டர்கள் மற்றும் சமூக வலைதள பிரிவுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் நலதிட்ட உதவிகளை தொடங்கி வைக்க பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்மாநில அரசு செய்யாததால் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் திரும்பி வந்துள்ளார்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் மோடி வரும் 12ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு  அம்சங்களில் எந்த குளறுபடிகளும் வந்துவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு மிகவும் கவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள இந்து மக்கள் கட்சியின் தலைமை அலுவலத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், பிரதமர் மோடி வருகை குறித்து திமுக அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அவர் கூறியிருப்பதன் விவரம் பின்வருமாறு:-  பஞ்சாப் சென்ற பிரதமரை வேண்டுமென்றே அங்குள்ள காங்கிரஸ் அரசு தடுத்து திருப்பி அனுப்பியிருக்கிறது. பிரதமரை அவமதித்த அந்த அம்மாநில அரசாங்கத்தை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.  காங்கிரஸ் ஆட்சியில் தான் அனைத்து தீவிரவாத இயக்கங்களும் செயல்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில்  பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில், மத்திய அரசின் உளவுத்துறை, தமிழக உளவுத்துறை மோடியின் வருகையை ஒட்டி கண்காணித்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். தேசிய இளைஞர் தினம் கொண்டாடும் போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும். மது ஒழிக்க வேண்டும். ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி வருகையை ஒட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். டாஸ்மாக் கடைகளுக்கு மாற்றாக கள் கடைகளை திறக்க வேண்டும், சாராய ஆலைக்கு அனுமதி கொடுக்கும் திமுக அரசாங்கம் ஏன் கள் கடைகளுக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது என கேள்வி எழுப்பி உள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!