போலீஸார் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடியடி நடத்துவதில் தவறில்லை....பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் அதிரடி கருத்து ... ...

By Selvanayagam PFirst Published Dec 18, 2019, 12:09 PM IST
Highlights

மாணவர்கள்  கற்களை எறிந்தால், பொதுச் சொத்துகளுக்குத் தீ வைத்தால் அதற்கு ஏற்றார்போல்தான் போலீஸார் எதிர்வினையாற்றுவார்கள் என்று  பாஜக எம்.பி.யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

மத்திய அரசு திருத்தம் செய்து கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியதிற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த சூழலில் பாஜக எம்.பி. கவுதம் கம்பீரிடம், டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது குறித்து நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், "என்னைப் பொறுத்தவரை மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது தவறு. 

ஆனால், அசம்பாவிதங்கள் நடந்து வன்முறை ஏற்பட்டால் போலீஸார் தங்களைப் பாதுகாக்கத் தடியடி நடத்துவதில் தவறில்லை.
நீங்கள் கற்களை எறிந்தால், பொதுச் சொத்துகளுக்குத் தீ வைத்தால் அதற்கு ஏற்றார்போல்தான் போலீஸார் எதிர்வினையாற்றுவார்கள். 

நீங்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால், எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. உங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன.உங்கள் பிரச்சினைகளைப் பேசுங்கள். 

அந்த விஷயத்தை மத்திய அரசிடம் கொண்டு செல்லுங்கள். அதைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
குடியுரிமைச் சட்டம் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல. இந்தச் சட்டம் குடியுரிமை வழங்குமே தவிர குடியுரிமையைப் பறிக்காது" எனத் தெரிவித்தார்.

click me!