சரத்குமாருக்கு 90% இடங்களை விட்டுக் கொடுத்த எடப்பாடி: இனி, எங்கு நிற்க போகுது? என்ன பண்ண போகுது அ.தி.மு.க.!

By Vishnu PriyaFirst Published Dec 18, 2019, 11:21 AM IST
Highlights

உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் கேட்ட இடங்களில் 90% இடங்களை அ.தி.மு.க. அளித்துள்ளது. எனவே அ.தி.மு.க. தலைமையிலான எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம். இந்த கூட்டணி பெரும் வெற்றி பெறும். 

 

*    மா.சுப்பிரமணியன், தன் எஜமான விசுவாசத்தை காட்ட, ஸ்டாலினின் ஊதுகுழலாக மாறி, அமைச்சர் வேலுமணி மீது சேற்றை வாரி இறைத்துள்ளார். ‘ஸ்டாலின் ஜீரோ அல்ல! ஹீரோதான்’ என்பதை நிரூபிக்க நான்கு பக்க அறிக்கை வாயிலாக படாதபாடு பட்டிருக்கிறார். ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் விளக்கம் அளித்ததும், உங்கள் முதுகுக்கு பின்னால் உங்கள் தலைவர் ஒளிந்து கொள்கிறார். அவர் ஜீரோவா இல்லை ஹீரோவா?
-    ரவி (விருகம்பாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.)

*    குடிகெடுக்கும் மசோதாதான் குடியுரிமை சட்ட திருத்த மசோதா. அதை வங்கக்கடலில் தூக்கி எறிய வேண்டும். அத வங்கக் கடலில் தமிழர்களின் ரத்தம் கலந்துள்ளதே! காரணம், ஈழத் தமிழர்கள் பற்றி அந்த மசோதாவில் எந்த குறிப்பும் இல்லை. டில்லியை போல தமிழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. 
-    வைகோ (ம.தி.மு.க. பொதுச்செயலாளர்)

*    ஜெயலலிதாவின் உருவ பொம்மையை சவப்பெட்டியில் வைத்து, அதன் மீது தேசிய கொடியை போர்த்தி, கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ம் தேதியன்று மாஃபா பாண்டியராஜன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பன்னீர்செல்வம் அணியின் வேட்பாளர் மதுசூதனனுக்காக பிரசாரம் செய்தார். இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் அவர் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக டிசம்பர் 18-ல் அமைச்சர் பாண்டியராஜன் ஆஜராக உத்தரவு.
- பத்திரிக்கை செய்தி

*    பிரதமரும், உள்துறை அமைச்சரும், இந்திய மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியதால், நாங்கள் குடியுரிமை சட்ட மசோதாவை ஆதரித்தோம்.  ஆனால் இதை எங்களுக்கு எதிராக திரித்து பேசி, திசை திருப்புகின்றனர் தி.மு.க.வினர். எங்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் அவர்கள் கத்தியோடு வந்தால் நாங்கள் துப்பாக்கியோடு வருவோம். 
-    ஜெயக்குமார் (மீன்வளத்துறை அமைச்சர்)

*    கிரண்பேடி, என் அதிகாரிகளை அழைத்து மிரட்டுவது, வசைபாடுவது, அதிகாரிகள் மீது சி.பி.ஐ.யை வைத்து நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டல் விடுப்பது என செய்கிறார். இதெல்லாம் கவர்னருக்கு அழகல்ல. நான் மத்திய புலனாய்வு துறைக்கு அமைச்சராக இருந்தவன். கிரண்பேடியின் இது போன்ற பூச்சாண்டி வேலைகளை நிறைய பார்த்துள்ளேன். என்னிடம் எதுவும் பலிக்காது. 
-    நாராயணசாமி (புதுவை முதல்வர்)

*    மேட்டுப்பாளையத்தில் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தது வேதனைக்குரிய சம்பவம். அப்பகுதி தலித் மக்கள் சுற்றுச் சுவர் எழுப்பிட வேண்டாம்! என கேட்டும், தலித் மக்கள் என்பதால் அதிக உயரம் கொண்ட சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. சுவர் கட்டியவரின் வீட்டு கழிவு நீரும், தலித் மக்களின் வீட்டுப் பகுதியில் விடப்பட்டிருக்கிறது. இதை சாதாரண விபத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்!
-    திருமாவளவன் (வி.சி.க. தலைவர்)

*    நாட்டில் நடக்கும் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு, குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக கோவில் சிலைகள் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த போலீஸ் துறை உயரதிகாரி, இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. அமைச்சர்களையும் குற்றஞ்சாட்டி இருந்தார். எனவே அவரது இடத்திற்கு வந்திருக்கும் புது அதிகாரி சிலை திருட்டு வழக்கில் உள்ள முழு உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும். 
-    மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*    குடியுரிமை மசோதா பார்லிமெண்டில் விவாதத்திற்கு வந்தபோது, அதை அ.தி.மு.க. ஆதரித்தது. அதற்கு காரணம் கூட்டணி நிர்பந்தம் தான். அ.தி.மு.க. மட்டுமின்றி, மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள பிற மாநிலங்களின் கட்சிகளும், அந்த மசோதாவை ஆதரித்தே பேச வேண்டிய நிலை இருந்தது. எனினும், நான் அந்த மசோதாவில், முஸ்லீம்கள் விடுபட்டு போனது பற்றிதான் பேசினேன். 
-    எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க. எம்.பி.)

*    உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் கேட்ட இடங்களில் 90% இடங்களை அ.தி.மு.க. அளித்துள்ளது. எனவே அ.தி.மு.க. தலைமையிலான எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம். இந்த கூட்டணி பெரும் வெற்றி பெறும். 
-    சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)
 

click me!