இனி பேச்சுக்கு இடமில்லை அபராதம் தான்.. கொரோனாவை தடுக்க அரசு, அதிகாரிகளுக்கு போட்ட உத்தரவு.

By Ezhilarasan BabuFirst Published Mar 17, 2021, 1:45 PM IST
Highlights

பொதுவிடங்களில் மாஸ்க் அணியாமல் இருந்தால் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அது 500 ரூபாயும், சமூக இடைவெளியை கடைப் பிடிக்காமல் இருந்தால் 500 ரூபாயும், அரசினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழிகாட்டுதலை மீறினால் 500 ம் அபராதமாக விதிக்கப்படும்.  

பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதுடன் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முகக்கவசம் அணியாமலும் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வது தொடர்கிறது. எனவே கொரோனா நோய்த்தடுப்பு நெறிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்டிருப்பதாக சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். அதன் விவரம்:

தமிழகத்தை ஒட்டிய மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களிலும் சமீபகாலமாக கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுமக்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு  ஒத்துழைக்க மறுத்து வருகின்ற நிலை நீடிக்கிறது. பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும், மாஸ்க் அணியாமலும் அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதே கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. 

இதை தடுக்கும் விதமாக கொரோனா வழிகாட்டுதலை மீறுவோருக்கு அபராதம் விதிக்க, சுகாதாரத் துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  வருவாய்த்துறையில் வருவாய் ஆய்வாளர் மற்றும் உயர் அலுவலர்களும், காவல் துறையில் உதவி ஆய்வாளர் மற்றும் உயர் அலுவலர்களும் உள்ளாட்சித் துறையில் துப்புரவு ஆய்வாளர் மற்றும் உயர் அலுவலர்களும், சுகாதாரத் துறையில் சுகாதார ஆய்வாளர் மற்றும் உயர் அலுவலர்களும் அபராதம் விதிக்க அரசினால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பொதுவிடங்களில் மாஸ்க் அணியாமல் இருந்தால் 200 ரூபாயும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் அது 500 ரூபாயும், சமூக இடைவெளியை கடைப் பிடிக்காமல் இருந்தால் 500 ரூபாயும், அரசினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வழிகாட்டுதலை மீறினால் 500 ம் அபராதமாக விதிக்கப்படும். அரசின் வழிகாட்டு நெறிகளை கடைப்பிடிக்காமல் இருக்கும் நிறுவனங்களுக்கு 5000 மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசின் வழிகாட்டு நெறிகளை மீறினால் 5 ஆயிரம், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலை ஏற்று கொரோனா பரவுதலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும். 

மீறினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை சிவகங்கை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் இருந்ததற்கு 4 லட்சத்து 41 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் குறித்து பொது சுகாதாரத் துறையின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது . இந்நிலையில் பொதுமக்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவதும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், முகக் கவசம் அணிந்துதான் வெளியில் செல்வது போன்ற நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். 

 

click me!