சித்தியை விடாமல் தொல்லை கொடுக்கும் டிடிவி தினகரன்.. சசியின் மானசீக ஆதரவு அமமுக-வுக்குதானாம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 17, 2021, 1:13 PM IST
Highlights

கட்டாயத்தின் பெயரில் இந்த கூட்டணி அமைக்கவில்லை. முன்பிருந்தே பேசிக்கொண்டு தான் இருந்தோம். கூட்டணி உறுதியானவுடன் எங்கள் வேட்பாளர்கள் 42 பேர் முழு மனதுடன் வாபஸ் வாங்கி உள்ளனர். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அதன் தலைவர் விஜயகாந்த்தை சந்தித்த பின் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எங்களுடைய வெற்றி கூட்டணியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். எங்களுடைய கொள்கை தமிழகத்தில் தீய சக்தியான திமுகவையும், துரோக கட்சியான கூட்டணியையும் ஆட்சிக்கு வர விட கூடாது என்பது தான். இந்த தேர்தலை பொறுத்தவரை எங்களுடைய ஒரே எண்ணம் திமுக, அதிமுகவை அகற்றுவது தான். SDPI உடன் கடந்த முறையில் இருந்தே கூட்டணியில் உள்ளோம். தற்போது தேமுதிக உடன் உடன்பாடு எட்டப்பட்டு கூட்டணி அமைத்துள்ளோம். சசிகலாவின் மானசீக ஆதரவு எங்களுக்குதான் உள்ளது. 

கட்டாயத்தின் பெயரில் இந்த கூட்டணி அமைக்கவில்லை. முன்பிருந்தே பேசிக்கொண்டு தான் இருந்தோம். கூட்டணி உறுதியானவுடன் எங்கள் வேட்பாளர்கள் 42 பேர் முழு மனதுடன் வாபஸ் வாங்கி உள்ளனர். மக்களை ஏமாற்றி வெற்று வாக்குறுதிகளை தான் திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையாக அளித்துள்ளது. ஆளுங்கட்சி வேண்டுமானால் வெற்றி நடை போடுவதாக கூறி கொள்ளலாம் ஆனால் மக்கள் காதில் பூ வைக்க முடியாது. மக்கள் புரிந்து கொள்வார்கள். நான் யாரிடமும் பேசவில்லை. ஆனால் எங்கள் வேட்பாளர்களே விரும்பி தான் வாபஸ் பெற்றனர். குறிப்பாக விருத்தாசலத்தில் நல்ல வேட்பாளர் தான், பிரேமலதா அங்கு நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையில் அவர் வாபஸ் பெற்றார். அப்பகுதியில் பிரேமலதாவிற்கு உறுதுணையாக இருந்து வெற்றி பெற செய்வோம். 

தேர்தல் நேரத்தில் திமுக, ஆளுங்கட்சி வர கூடாது என விரும்பு கின்றனர். அதேபோல் தேமுதிக எங்களுடன் கூட்டணியில் இருப்பதை மக்கள் வரவேற்கின்றனர்.  எங்களின் ஒரே இலக்கு, அமமுக தலைமையில் உள்ள கூட்டணி மீண்டும் அம்மா ஆட்சியை தமிழகத்தில் அமைப்பது தான். ஆர்.கே.நகரில் மீண்டும் நிற்க வில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், முன்னாடி அந்த தொகுதியில் நின்றதே ஒரு கட்டாயத்தின் பெயரில் தான். அங்கும் நின்று வெற்றியும் பெற்றுள்ளேன். எனவே தற்போது பயத்தின் காரணமாக தொகுதி மாறி நிற்கவில்லை என்றார். தேமுதிகவிற்கு பக்குவம் இல்லை என்கிற கேள்விக்கு, விஜயகாந்த் சுயமாக நின்று விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார். ஆனால் தமிழக முதல்வர் எப்படி முதல்வர் பதவியை எப்படி பெற்றார் என்பது எல்லாருக்கும் தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.

மொத்த த்தில் அரசியலை விட்டே விலகிக் கொள்கிறேன் எனவும், புரட்சித்லைவி வழியில் அதிமுகவின் வெற்றியே தனது ஒரே லட்சியம் எனவும், அதற்காக அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்க விருப்புகிறேன் எனவும் சசிகலா அறிக்கை வெளியிட்டு அமைதி காத்து வருகிறார். இந்நிலையில் அவரின் உறவினரான டிடிவி தினகரன் சசிகலாவின் மானசீக ஆதரவு அமமுகவுக்குதான் என கூறியுள்ளார். இது ச சிகலா ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அதிமுகவின் வெற்றிக்கு தான் எந்த விதத்திலும் தடையாக இருந்துவிடக்கூடாது என்றும், அதற்காகவே அரசியலை விட்டு விலகி இருக்க போவதாகவும் அவர் வெளிபிபடையாக கூறிய பின்னரும், டிடிவி தினகரன் சசியின் ஆதரவு தங்கள் கட்சிக்குதான் என கூறியிருப்பது சசிகலாவின் முடிவுக்கும், அவரின் கொள்கைக்கும் எதிரானதாக உள்ளது. 

ஏற்கனவே டிடிவி தினகரனின் சுயநலம்தான் சசிகலாவை இந்த முடிவுக்கு தள்ளியது எனவும், சசிகலா டிடிவி தினகரனை விட்டு விலகியே இருக்க வேண்டும் எனவும் சசியின் சகோதரர் திவாகரன் உள்ளிட்டோர் டிடிவியை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் டிடிவி தினகரனின் கருத்து மேலும் அதிமுக மற்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் மத்தியில் கொந்தளிப்பையும், கடுமையான விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒதுங்கி நிற்க சசிகலா முடிவெடுத்த பின்னரும் அவரை விடாமல் டிடிவி தினகரன் அரசியல் களத்திற்கு இழுப்பது உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. 
 

click me!