
தற்போது நடைபெற்று வரும் ஆட்சியில், குடும்ப ஆட்சி இருக்காது என தெரிவித்த டி.டி.வி தினகரன் எங்கிருந்து வந்தார் என ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்கு செல்லும் முன் அவரது உறவினரான டி.டி.வி தினகரனை அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் அமர்த்தி விட்டு சென்றார்.
மேலும் பிரிந்து போனவர்கள் தங்களுடன் வந்து சேருவார்கள் என ஓ.பி.எஸ்க்கு மறைமுகமாக அழைப்பு விடுத்தார். ஆனால் டி.டி.வி எப்படி எனக்கு அழைப்பு விடுக்க முடியும் என ஓ.பி.எஸ் சாடிவிட்டார்.
இந்நிலையில், நாமக்கல் சேத்தமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பி. சுந்தரம் கலந்து கொண்டு பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை விசாரணை அமைத்து தெளிவு படுத்த வேண்டும்.
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த குடியரசு தலைவரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் 12 பேர் கொண்ட குழு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க உள்ளோம்.
குடும்ப ஆட்சி இருக்காது என கூறும் டி.டி.வி தினகரன் எங்கிருந்து வந்தவர்.
இவ்வாறு சுந்தரம் கூறினார்.