பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும்? முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 19, 2021, 7:47 PM IST
Highlights

பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைத்துத் தரப்பு கருத்தைக் கேட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா 3-வது அலை வரக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமும். ஒருவேளை வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான திட்டங்களும், தமிழக அரசின் சார்பில் வகுக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகல் சென்னையிலிருந்து விமானம் மூலமாக டெல்லி சென்றடைந்தார். நேற்றிரவு டெல்லியில் தங்கிய முதலமைச்சர், இன்று 12 மணியளவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தார். சந்திப்பின் போது தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். 

குடியரசுத் தலைவருடனான சந்திப்பிற்கு பிறகு டெல்லி விமான நிலையம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழாவை தலைமைத் தாங்கி நடத்த குடியரசுத்தலைவருக்கு நான் அழைப்பு விடுத்துள்ளேன். அந்த விழாவில் சட்டமன்ற வளாகத்துக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படும் என்ற செய்தியையும் தெரிவித்திருக்கிறேன். 

மதுரையில் கருணாநிதியின் பெயரில் அமையவிருக்கும் நூலகம், சென்னை கிண்டியில் அமையவிருக்கும் அரசு மருத்துவமனை, சென்னை கடற்கரை சாலையில் இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியிருப்பதை குறிக்கும் வகையில் அமையவிருக்கும் நினைவுத்தூண் அமைக்கும் பணி ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்திவைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளேன். அதற்கு ஒப்புதல் அளித்ததோடு, தேதியை ஒரிரு நாட்களில் தெரிவிப்பதாக கூறியுள்ளார். 7 பேர் விடுதலைக்காக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை திமுக அரசு முன்னெடுக்கும். 

மேலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர்;- 3-வது அலை வரக்கூடாது என்பதுதான் அனைவரின் எண்ணமும். ஒருவேளை வந்தால் அதை எப்படிச் சமாளிப்பது என்பதற்கான திட்டங்களும், தமிழக அரசின் சார்பில் வகுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து இப்போதுள்ள சூழ்நிலையில் திறக்க முடியாத நிலை உள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைத்துத் தரப்பு கருத்தைக் கேட்டு முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

click me!