பற்றாக்குறைதான் இருக்கே... இதையும் கொஞ்சம் முயற்சி செய்யுங்க.. கேப்டன் கொடுத்த அதிரடி யோசனை..!

By Asianet TamilFirst Published Apr 29, 2021, 9:12 PM IST
Highlights

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
 

வட மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டடுள்ளது. இதைச் சமாளிக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலும் ஆக்சிஜன் தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இ ந் நிலையில் திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “ஆக்சிஜன் வாயு உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றியதோடு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் 2016-ஆம் ஆண்டு முதல் ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்கூடம், பெல் நிறுவனத்தின் மேலாண்மை பிரச்சினை காரணமாகச் செயல்படாமல் உள்ளது. அந்த ஆக்சிஜன் கூடத்தை மீண்டும் செயல்படவைத்தால் நாள்தோறும் 400 சிலிண்டர் அளவுக்கு ஆக்சிஜனைப் பெற முடியும்.
ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக உள்ள இந்தக் காலகட்டத்தில், பெல் நிறுவனத்தை மீண்டும் ஆக்சிஜன் தயாரிப்புக்குப் பயன்படுத்தினால் மிகுந்த பயன் அளிக்கும். எனவே, மக்களின் நலன் கருதி திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தியை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

click me!