ஜெயிக்க போறது பன்னீர் மகனா இல்ல ஜக்கையன் மகனா... ஓ.பி.எஸ்-க்கு எதிராக கொம்பு சீவும் எடப்பாடியார்..!

By Vishnu PriyaFirst Published Feb 18, 2019, 3:24 PM IST
Highlights

எடப்பாடியார் செய்திருக்கும் ஒரு காரியம் பன்னீரின் நம்பிக்கையை பஸ்பமாக்கிவிட்டது. அதாவது தேனி மாவட்டத்தை சேர்ந்தவரும் பன்னீருக்கும் ஆகாதவருமான ஜக்கையனின் மகன் பாலமணி மார்பனை, அதே தேனி தொகுதிக்கு  சீட் கேட்டு விண்ணப்பிக்கும் படி சிக்னல் கொடுத்து காரியத்தை முடித்துள்ளது ஒரு டீம். 

ஜெயலலிதா சட்டமன்றத்தில் பிரதானமாக அமர்ந்திருக்கையில், எதிர்கட்சி வரிசையிலிருக்கும் தி.மு.க.வினரை நோக்கி ‘வாரிசு அரசியலுக்காக உருவாக்கப்பட்டதுதான் உங்கள் கழகம். கருணாநிதி கட்சி வளர்ப்பதும், சொத்து குவிப்பதும் தன் பிள்ளைகளுக்காகதான்.’ என்று உதடுக்கே வலிக்காமல் உறுமுவார் ஓ.பன்னீர்செல்வம். அதைக்கேட்டு தி.மு.க.வினர் திமிறி கதறுவார்கள். இதையெல்லாம் பார்த்து சந்தோஷித்து சிரிப்பார் அம்மா. 

ஜெ.,விடம் பாராட்டு பெற்று பரிசிலும் எதிர்பார்த்து அடிக்கடி இந்த ‘வாரிசு கழகம்’ எனும் சொல்லாடலை தி.மு.க.வுக்கு எதிராக பிரயோகித்த பன்னீர்செல்வம் இன்று அதே வாரிசு அம்பினால் வீழ்த்தப்பட்டு கிடப்பதுதான் காலத்தின் கோலம். தேனி நாடாளுமன்ற தொகுதியினை தன் மகன் ரவீந்திரநாத்துக்கு கேட்டுக் கொண்டுள்ளார் பன்னீர். இதற்கு எடப்பாடி அணியிலிருந்தும், இரு அணிகளையும் சாராத நடுநிலையாளர்கள் தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு. 

அம்மா இருந்தபோது சில முறை முதல்வர், நிதியமைச்சர், இப்போது துணை முதல்வர், கழக ஒருங்கிணைப்பாளர் என்றெல்லாம் ஏகபோகமாக பதவிகளை அனுபவித்த பன்னீர்செல்வம் இப்போது மகனையும் அடுத்தடுத்து அதிகார மையமாக வளர்த்தெடுக்க நினைப்பது என்ன நியாயம்? அமைச்சர் பதவியில் அமராமல், பல காலமாக எம்.எல்.ஏ.வாகவே இருப்பவர்களும், அதை விட மோசமான சூழலில் இருப்பவர்களுமாக பலர் இருக்கின்றனர். இவர்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பை தருவதை விட்டு, அதிகாரத்தை ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் குவிப்பது அம்மாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்! என்று கொதித்துள்ளனர். 

இது போதாதென்று அமைச்சர் கருப்பணன் ‘வாரிசு அரசியலுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை. வாரிசுக்கு சீட் கேட்டு விருப்ப மனு விண்ணப்பிக்கலாம், ஆனால் தலைமை சீட் தர வாய்ப்பில்லை.’ என்று நேரடி நெத்தியடியாக பேசியிருக்கிறார். தன் மகனுக்கு வாய்ப்பு கேட்டதும் ஏதோ கட்சிக்கு எதிராக கொலை பாதக செயலை தான் செய்துவிட்டது போல் பாய்ந்து பிடுங்கும் சொந்த கட்சி புள்ளிகளை நினைத்து கடும் வேதனையிலிருக்கிறார் பன்னீர். எடப்பாடியாரிடமே இதைச் சொல்லி நியாயம் கேட்கும் முடிவில் இருந்திருக்கிறார் அவர். 

ஆனால் அதற்குள் எடப்பாடியார் செய்திருக்கும் ஒரு காரியம் பன்னீரின் நம்பிக்கையை பஸ்பமாக்கிவிட்டது. அதாவது தேனி மாவட்டத்தை சேர்ந்தவரும் பன்னீருக்கும் ஆகாதவருமான ஜக்கையனின் மகன் பாலமணி மார்பனை, அதே தேனி தொகுதிக்கு  சீட் கேட்டு விண்ணப்பிக்கும் படி சிக்னல் கொடுத்து காரியத்தை முடித்துள்ளது ஒரு டீம்.  

தினகரன் அணியிலிருந்து ஆளும் அணிக்கு தாவிய ஜக்கையன், துவக்கத்தில் இருந்தே பன்னீருடன் மோதுவதும், அவரது மகன் பாலமணி மார்பன் பன்னீரின் மகன் ரவீந்திரநாத்-க்கு போட்டியாக நிற்பதும் வாடிக்கையான விவகாரமாகி இருக்கிறது. ஜக்கையனின் செயல்பாடுகளுக்கு எடப்பாடியாரின் ஆசீர்வாதம் பூரணமாக இருக்கிறதோ? என்பதே பன்னீரின் கவலை. பன்னீர் மகனுக்கு தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தரப்பட்டது. பின் ஜக்கையன் முதல்வரிடம் பேசி தன் மகனுக்கு இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் பதவியை வாங்கிக் கொண்டார். ஆக இப்படி நேருக்கு நேராக நின்று அடிக்கும் ஜக்கையனின் இம்சை இப்போது எம்.பி.தேர்தலிலும் வருமென்று நினைக்கவில்லை பன்னீர்.

 

தேனியில் சீட் கேட்டு பாலமணிமார்பன் விருப்ப மனு தாக்கல் செய்ய, “நான் 1982ல் ஏற்கனவே எம்.பி.யா இருந்தவன். அதனால எந்த பிரச்னையுமில்லாம அழகா என் பையனை ஜெயிக்க வெச்சிடுவேன். இது போக பன்னீர் மகனுக்கு சீட் கொடுக்காம யாரை இங்கே வேட்பாளரா நிறுத்தினாலும் அ.ம.மு.க.காரங்க அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடுறோமுன்னு சொல்லியிருக்காங்க. அதனால சீட் கொடுங்க, ஜெயிச்சுக் காட்டுறோம்.’ என்று ஏகத்துக்கும் எடப்பாடியாருக்கு நம்பிக்கை உற்சாகத்தை ஊட்டியிருக்கிறாராம் ஜக்கையன். 

எடப்பாடியாரும் கிட்டத்தட்ட பாஸிடீவான ரியாக்‌ஷனை ஜக்கையனுக்கு காட்டியிருக்கிறாராம். இதனால் முழுமையாக டென்ஷனாகியிருக்கும் பன்னீர்...’என்ன எனக்கு எதிரா லோக்கல் எம்.எல்.ஏ.வை உங்க தலைவர் கொம்பு சீவுறாரா?’ என்று எடப்பாடி ஆதரவு தேனிமாவட்ட அ.தி.மு.க.வினரிடம் பாய்ந்திருக்கிறாராம். அ.தி.மு.க.வினுள் இப்படி இரு தரப்புகளும் மோத துவங்க ‘களத்துல யாரு ஜெயிச்சு சீட் வாங்க போறாங்கன்னு பாத்துருவோம்பே’ என்று வேடிக்கை பார்க்க கூடி நிற்கின்றனர் அ.தி.மு.க.வினர். ம்ம்ம் முடியலை!

click me!