
தேனி மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கவேண்டும் என்றும் இந்திட்டத்தை மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக தொடங்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது, தேனி மாவட்டம் பொட்டிபுரம் பகுதியிலுள்ள மலையடிவாரத்தில், நியூட்ரினோ ஆய்வுமையம் அமைப்பதற்குத் திட்டமிடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பின் சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நியூட்ரினோ திட்டத்துக்கு கடந்த மார்ச் மாதம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடைவிதித்தது. இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த 17 ஆம் தேதி சென்னை வந்த இந்திய அணுசக்தி தலைவர் சேகர்பாசு, செய்தியாளர்ளிடம் பேசும்போது, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியைப் பெற்று, தேனியில் நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் செயல்படுத்தப்படும்' என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
மேலும் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த மத்திய அமைச்சரவை செயலாளர் பி.கே.சின்ஹாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து நியூட்ரினோ ஆய்வ மைய திட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் அமைப்பு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.