
இந்தியப் பிரதமர் மோடியை யாராவது பாராட்டிவிட்டால் போதும்... உடனே மல்லுக்கு வந்து நிற்பார் சிவகங்கைச் சீமை சீமான் சிதம்பரம்! இப்போது அவருக்கு அகப்பட்டிருக்கிறது அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா சொன்ன பாராட்டு மழை!
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உலக தொழில் முனைவோர் மாநாடு நேற்று துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா. இந்த மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றினார் பிரதமர் மோடி. இந்த விழாவில் அவரைப் பாராட்டிப் பேசினார் இவாங்கா.
தேநீர் விற்பனையாளராக இருந்து பிரதமராக உயர்ந்த மோடி, இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறப்பாக பணியாற்றி வருகிறார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 130 கோடி மக்களைக் கொண்ட இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் 130 மில்லியன் மக்களை கொடும் வறுமையில் இருந்து நீக்கி சாதனை படைத்து வருகிறார். இந்தியா மிக உண்மையான நட்பு நாடு என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க மக்களின் கனவை நனவாக்கும் பணியில் என்னை இணைத்துக் கொண்டுள்ளேன் என்று பேசினார் இவாங்கா.
இந்தச் செய்தி பிரபலமானவுடன், குஜராத் தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு பாராட்டு மழை மோடிக்குக் கிடைப்பதா என வெகுண்டெழுந்தார் ப.சிதம்பரம். ஊழல் முத்திரை குத்தப்பட்டு மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸின் ஊழல் சாதனைகளை உலக நாடுகளே பட்டியலிடும் அளவுக்கு கடந்த 2004-2014ம் ஆண்டுகளில் நிலைமை இருந்தது. ஆனால், அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தங்கள் அரசின் போதான ஊழல் சாதனைகளை மறைத்துவிட்டு, சாதனைப் பட்டியலை இப்போது வேறு திசையில் மாற்றிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றி மோடி அரசு நடைமுறைப் படுத்துகிறது. அப்படியே எங்கள் திட்டங்களைக் காப்பி அடிக்கிறது என்று கூறினார் சிதம்பரம். அப்படியே இருந்தாலும் உங்கள் திட்டங்களின் ஊழல் நடைமுறைகளைக் காப்பி அடிக்கவில்லை அல்லவா என்று வாயை மூடினார்கள் ஆளும் தரப்பினர்.
இந்நிலையில், இப்போது இவாங்கா டிரம்பின் வறுமை ஒழிப்புக் கருத்து மீண்டும் சிதம்பரத்துக்கு கண்ணில் பட்டிருக்கிறது. உடனே தனது டிவிட்டர் பக்கத்தில் அதனைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தியாவில் வறுமை நிலையிலிருந்து 130 மில்லியனுக்கும் (13 கோடி) மேற்பட்டோர் மீட்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் குறிப்பிட்டது காங்கிரஸ் அரசின் சாதனை என டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது டுவிட்டரில், இந்தியாவில் வறுமை நிலையிலிருந்து 130 மில்லியன் பேர் மீண்டுள்ளதாக இவாங்கா டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார். இது காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை மேற்கொண்ட நடவடிக்கையால் எடுக்கப்பட்ட சாதனை. இக் காலகட்டத்தில் சுமார் 140 மில்லியன் பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.