
பெத்தவனே ஆனாலும் அரசியல் எதிரின்னா தூக்கி போட்டு மிதிக்கிறதுதான் தேனிமாவட்ட அரசியல்வாதிகளின் செயல். இந்நிலையில் தினகரனால் அரசியலில் தூக்கிவிடப்பட்ட பன்னீர்செல்வம் அவரையே கட்சியைவிட்டு கட்டம் கட்டியதை செத்தாலும் மறப்பார்களா? இந்நிலையில் ஆர்.கே.நகரில் தினகரனின் வெற்றியானது பன்னீரின் சொந்தமாவட்டத்தில் அவரது கெளரவத்தை களேபரமாக்கி உள்ளது.
தினகரனுக்கு எதிராக செயல்பட்டு வருவதால் தமிழக துணைமுதல்வரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்துக்கு எதிராக அவரது சொந்த மாவட்டம் தேனியில் தினாவின் ஆதரவுப்படை துடிப்பாய் இயங்கி வந்தது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ‘நன்றி மறந்தவர்! துரோகி! உண்டவீட்டுக்கே ரெண்டகம் செய்தவர்’ என்றெல்லாம் (நாம் மரியாதையாக குறிப்பிட்டுள்ளோம். யதார்த்தத்தில் அவர்கள் பேசும் ஸ்டைலே வேற லெவல்) ஆரம்பித்து முடிந்தளவுக்கு கீழ்தரமாக விமர்சித்தார்கள்.
ஒரு சிலர் பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்து அதை வீடியோவாக்கி வாட்ஸ் ஆப்பில் வைரலாக்கிவிட்டனர்.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரனுக்கு எதிராக மிக வீரியமாகவே பிரச்சாரம் செய்தார் பன்னீர்செல்வம். ஜெயலலிதாவுக்கு சசிகலா குடும்பம் செய்த துரோகங்களாக பெரும் பட்டியலை அடுக்கினார்.
இந்நிலையில் அத்தேர்தலின் முடிவானது தினகரனை சாதனையாய் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வாக அடையாளப்படுத்தியுள்ளது. இதையடுத்து தேனியில் பன்னீர்ல்செல்வத்தை மிகக் கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர் தினகரனின் ஆதரவாளர்கள்.
”அம்மாவோட இறப்பை சர்ச்சையாக்கி, போயஸிலேயே அம்மா இறந்துட்டாங்க அப்படிங்கிற அளவுக்கு சீன் போட்டு, பல உண்மைகளை மறைச்சு ‘தர்மயுத்தம்’ அப்படிங்கிற பெயர்ல சீன் போட்டாரு பன்னீர். அந்த டிராமா கோஷ்டிக்கு தலைவனாகவும் தன்னை அறிவிச்சுக்கிட்டார்.
மக்கள் ஆதரவும், தொண்டர்கள் ஆதரவும் தனக்கே சொந்தமுன்னு பகல் கனவு கண்டார். ஆனால் இன்னைக்கு யதார்த்தம் என்ன சொல்லுது? அம்மாவுக்கு மாற்று தினகரனே! அப்படின்னு அடிச்சு சொல்லியிருக்காங்க மக்கள். தினகரனோட வெற்றியை தமிழ்நாடு முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் கொண்டாடியிருக்காங்க. ஆக மக்களும், தொண்டர்களும் தினகரன் பக்கமிருக்கிறது அதிகாரப்பூர்வமா, சட்டப்பூர்வமா நிரூபணமாகி இருக்குது.
இதைப்பார்த்து துடிச்சுப்போன தர்மயுத்த தலைவன் தலைதெறிக்க ஓடி தலைமறைவாயிட்டார். இனி தேனி பக்கம் துணைமுதல்வர்னு சொல்லி அதிகாரம் பண்ண முடியுமா உம்மால?” என்று வெளிப்படையாகவே போட்டுத் தாக்க துவங்கியிருக்கின்றனர்.
அணி மாறியும் பன்னீருக்கு கட்டம் சரியாகவில்லை பாவம்!