அப்போ கிழக்கிந்திய கம்பெனி இருந்துச்சு... இப்போ வட இந்திய கம்பெனி... பாஜகவை பங்கம் செய்த கமல்ஹாசன்.!

By Asianet TamilFirst Published Aug 3, 2021, 8:57 PM IST
Highlights

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி இருந்தது போல, தற்போது வட இந்திய கம்பெனி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 

கோவையில் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சட்டப்பேரவைத் தேர்தலில் நேர்மையாக மநீமவுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு வணக்கம் சொல்லவே கோவை வந்துள்ளேன். கொரோனா தொற்று காரணமாக இத்தனை நாட்களாக வர இயலவில்லை. தற்போது கொரோனா தொற்று திடீரென அதிகரிக்கிறது. தன்னார்வலர்களாக ஈடுபட்ட எங்களுடைய கட்சித் தொண்டர்கள் பலரையும் கொரோனாவில் இழந்தோம். அந்தக் குடும்பங்களை எல்லாம் சந்தித்துப் பேசியிருக்கிறேன்.
கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் எந்தப் பாதிப்பும் இல்லை. கோவைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கக் காரணம், காசு கொடுக்க மாட்டோம் என்று சொல்லியும், வெற்றிக்கு அருகில் கொண்டுபோய் சேர்த்தார்கள். இங்கு கொங்கு நாடு என்பது ஒரு அரசியல் கோஷம். அதை மக்களின் தேவையாக நான் பார்க்கவில்லை. மக்களே அதற்குச் சரியான பதில் சொல்வார்கள். இது ஓர் அரசியல் கட்சியின் யோசனை இல்லை. ஒரு பெருநிறுவனத்தின் யோசனை. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி இருந்தது போல, தற்போது வட இந்திய கம்பெனி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள், அவ்வளவுதான். இச்சுரண்டலுக்கு எந்த மாநிலமும் இடம் கொடுக்காது என்பதே என் நம்பிக்கை.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. மாநில நிர்வாகிகள் எல்லாம் வெறும் பொம்மைகள்தான். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மாநில அரசு முடிந்த வரை செய்கிறது. இது இன்னும் போதாது என்பதே பொதுக் கருத்து. முயன்றதைச் செய்கிறார்கள், இன்னமும் செய்யலாம். உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சிகள் ஈடுபடாமல் மக்கள் ஈடுபட வேண்டும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். அதற்காக மநீம குரல் கொடுக்கும்.
என்னுடைய புகைப்படத்தையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் புகைப்படத்தையும் இணைத்து மீம்ஸ் உருவாக்கிப் பகிர்கிறார்கள். அது அந்தக் கட்சியினரின் நடத்தையையும் மாண்பையும் காட்டுகிறது. எங்கள் கட்சியில் அதுபோன்ற தவறை யாரும் செய்ய மாட்டார்கள். தற்போது நாட்டில் நியாயம் சொல்லும் அமைப்புகளையெல்லாம் மூடி வருகிறார்கள். சினிமாலும் இதே நிலைதான். அனைத்து முறையீட்டு மையங்களையும் தகர்த்துவிட்டால், பிறகு யாரும் யாரிடமும் முறையிட முடியாது. அரசு தன்போக்கில் செயல்படலாம். அதுதான் அவர்கள் நோக்கம்.
பெகாசஸ் உளவு விஷயத்தில் நாடாளுமன்றத்தில் என்ன நடக்கிறதோ, அதுவே என் கருத்து. எனது அந்தரங்க வாழ்க்கையை உளவு பார்ப்பது ஏற்புடையது அல்ல. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னைவிட மூத்த அரசியல் தலைவர். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவுக்கு எதிரான அணியை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சூழல் இருந்தால், அவரிடமிருந்து அழைப்பு வந்தால் நாங்கள் இணைந்து செயல்படுவோம்".
 

click me!