முதல்வர் நிவாரண நிதிக்கு தங்கசங்கிலி கொடுத்த இளம்பெண்.. சொன்னப்படி வேலை வாங்கிகொடுத்த மு.க.ஸ்டாலின்..!

By Asianet TamilFirst Published Jun 15, 2021, 9:40 PM IST
Highlights

சேலம் அருகே முதல்வரிடம் தங்கச் சங்கிலியை நிவாரண நிதியாக வழங்கிய இளம் பெண்ணுக்கு தனியார் நிறுவனத்தில் பணிக்கான ஆணையை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
 

கடந்த 12-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்துவிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்திருந்தார். சேலத்தில் இருந்து மேட்டூர் செல்லும் வழியில் மேச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் செளமியா தான் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை முதல்வர் நிவாரண நிதிக்காக மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். பொறியியல் படித்து முடித்த தனக்கு வேலை கேட்டும் முதல்வரிடம் மனு கொடுத்திருந்தார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட  முதல்வர் மு.க.ஸ்டாலின், இச்சம்பவம் குறித்து தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். “ வறுமையிலும் பொது நிவாரண நிதிக்கு உதவியது மனதை நெகிழ வைத்து விட்டதாகவும், பொன்மகளுக்கு படிப்புக்கு ஏற்ற வேலை  கிடைக்க ஏற்பாடு செய்யபடும்” எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த உறுதிப்படி, இளம்பெண் செளமியாவுக்கு மேட்டூர் அருகே உள்ள ஜே.எஸ்.டபிள்யூ என்ற தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.17,500 சம்பளத்தில் வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
அந்தப் பணி நியமனத்துக்கான ஆணையை மேட்டூர் அருகே பொட்டனேரியிலுள்ள சௌமியா வீட்டுக்கு நேரில் சென்று அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். அப்போது தமிழக முதல்வர் மு.க . ஸ்டாலின் செளமியாவிடம் பேசி, தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

click me!