காப்பாற்றச் சொல்லி போலீஸ் காலில் விழுந்து கதறிய இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த கொடூரம்..

By Ezhilarasan BabuFirst Published Jan 11, 2021, 12:54 PM IST
Highlights

அவரது பேச்சில் பதற்றம் காணப்பட்டாலும் போலீசாரின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால், சந்தேகத்தின் பேரில் நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திடீரென  புகுந்து தன்னை தன் குடும்பத்தினர்  கொலை செய்ய முயற்சிப்பதாக கூறி போலீசார் காலில் விழுந்து கெஞ்சி பரபரப்பை ஏற்படுத்திய 27 வயது ஜேக்கப் என்ற (என்ஜினியர்) வாலிபர்  இன்று தனது வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள நேசமணிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெபதாஸ். ஓய்வுபெற்ற  தலைமையாசிரியர், இவரது மனைவி ஷாலினி.  இவர்களுக்கு இரண்டு மகன்களில் மூத்தமகன் ஜெய்சன் 29  பல்மருத்துவராக வெளியூரில்  பணிபுரிகிறார். இளையமகன் ஜேக்கப் 27 சற்று மனநலம் பாதிக்கபட்டவர். ஜேக்கப் பாலிடெக்னிக் படித்து விட்டு சென்னையில் சில நிறுவனங்களில் வேலை பார்த்த நிலையில், ஓராண்டுக்கு மேலாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். அவருக்கு திடீர் மனநலம் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிகிழமை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென புகுந்து தன்னை தன் குடும்பத்தினர் கொலை செய்ய முயற்சிப்பதாக ஆங்கிலத்தில் மனு ஓன்றை எழுதி ஆட்சியரை பார்க்கவேண்டும் என  கூறி போலீசார் காலில் விழுந்து கதறினார்.இது அப்பகுயில் பரபரப்பை ஏற்படுத்தியது.  

அவரது பேச்சில் பதற்றம் காணப்பட்டாலும் போலீசாரின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் முன்னுக்குப்பின் முரணாக இருந்ததால், சந்தேகத்தின் பேரில் நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததைத் தொடர்ந்து பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் நேற்று மாலை திடீரென தனது வீட்டில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது தன்னை யாரோ கொலை செய்ய வருகிறார்கள் என கூறிகொண்டு அருகில் இருந்த கத்தியை எடுத்து தன்  தாய் ஷாலினியை  குத்தியதுடன், அதை தடுக்க சென்ற தந்தை ஜெயதாஸ் மற்றும் சகோதரனையும் பலமாக கத்தியால் தாக்கினார். பின்னர் அவர்களை கீழே தள்ளி விட்டு மொட்டை மாடிக்கு ஓடினார். அவரது தந்தை பின் தொடர்ந்து சென்றார். ஆனால் அதற்குள் அவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

தாக்கபட்ட மூன்று பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து நேசமணிநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்ட ஜேக்கப்பை குடும்பத்தினர் சமீபகாலமாக வீட்டிலேயே பாதுகாத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக தன்னை யாரோ கொலை செய்ய முயற்சிப்பதாக குடும்பத்தினரிடமும்.  தனது குடும்பத்தினரை கொலை செய்ய முயற்சிப்பதாக போலீசாரிடமும் புகார் கூறிய ஜேக்கப். கடந்த ஓரிரு தினங்களாக தற்கொலை செய்து கொள்வேன் என குடும்பத்தின மிரட்டி வந்த நிலையில். திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி அப்பகுதியினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

click me!