
திமுக 5 முறை ஆட்சியில் இருந்த போதும், மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்றும் டெங்குவைவிட திமுக மோசமானது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வெகு வேகமாக பரவி வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தர்மபுரியில் நேற்று நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசும்போது, டெங்குவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.
இந்த நிலையில், மதுரையில், மருத்துவ முகாம் ஒன்றை துவக்கி வைப்பதற்காக அமைச்சர் செல்லூர் ராஜு வருகை தந்தார். மருத்துவ முகாமை துவக்க வைத்த பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது என்றும் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சுனாமி வேகத்தில் செயல்பட்டு வருவதாக கூறினார்.
ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை என்று கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அரசு சிறப்பாக செயலாற்றி வருவதாக கூறினார்.
திமுக 5 முறை ஆட்சியில் இருந்தபோது மக்களுக்காக ஒன்றும் செல்லவில்லை என்று குற்றம் சாட்டினார். டெங்கு காய்ச்சலை விட திமுக மோசமானது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சனம் செய்தார்.