ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ளது. பிரதமர் மோடி பெருமிதம்.

By Ezhilarasan BabuFirst Published Feb 8, 2021, 12:02 PM IST
Highlights

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த கொரோனா காலத்தில் இந்தியா தனது கூட்டாட்சி வலிமையையும், ஒரு நெருக்கடியான நேரத்தில்  எப்படி செயல்பட முடியும் என்பதையும் உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்த கொரோனா காலத்தில் இந்தியா தனது கூட்டாட்சி வலிமையையும், ஒரு நெருக்கடியான நேரத்தில்  எப்படி செயல்பட முடியும் என்பதையும் உலகிற்கு எடுத்துக் காட்டியிருக்கிறது என அவர் கூறியுள்ளார்.  மொத்தத்தில் இந்திய ஜனநாயகத்தின் தாய் எனவும் அவர் பெருமிதத்தை தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மீது பிரதமர் இவ்வாறு பேசியுள்ளார். 

கடந்த வாரம் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  இந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது. கொரோனா நெருக்கடிக்கு மத்தியிர் ஒட்டுமொத்த உலகமும் இந்தியா மீது  ஏராளமான எதிர்பார்ப்புகளை வைத்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாடுகள் தவிக்கும் நிலையில், பொருளாதார தற்சார்பை நோக்கி இந்தியா பீடுநடை போடுகிறது.  இந்த கொரோனா காலத்தில் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு சிறந்த இடம் கிடைத்துள்ளது. இந்த நெருக்கடியான காலத்தில் இந்தியா தனது கூட்டாட்சி கட்டமைப்பையும், அதன் வலிமையையும் சர்வதேச நாடுகளுக்கு பறைசாற்றி உள்ளது. 

நெருக்கடி காலத்தில் நாம் எவ்வாறு இணைந்து பணியாற்ற முடியும் என்பதை சர்வதேச நாடுகளுக்கு இந்தியா உணர்த்தி உள்ளதன் மூலம் இந்திய  ஜனநாயகத்தின் தாயாக விளங்குகிறது.  கொரோனா தொற்றின் ஆரம்பத்தில், ஒட்டு மொத்த உலகமும்  இந்தியா குறித்து பல கவலைகளை வெளிப்படுத்தின, கொரோனா தொற்றுநோயால் இந்தியா தன்னை நிர்வகிக்க முடியாவிட்டால், இந்தியா மட்டுமல்ல அது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கவலை தெரிவித்திருந்தனர். ஆனால் இந்தியா ஒற்றுமையுடன் இருந்து அதை எதிர்கொண்டு அதை முறியடித்துள்ளது. ஒட்டுமொத்த உலகமும் முதலீட்டுக்காக ஏங்குகிறார்கள், ஆனால் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா சாதனை படைத்து வருகிறது.  இந்த தசாப்தத்தின் ஜனாதிபதியின் முதல் உரை பல சவால்களுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ளது, இந்தியா வாய்ப்புகளின் நிலம், இங்கு இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன, இது இளமையாக இருக்கும் ஒரு நாடு,  உற்சாகம் நிறைந்த நாடு, பல கனவுகளுடனும், உறுதியுடன் அதை நிறைவேற்ற முயற்சிக்கும் ஒரு நாடு. இந்த நாடு ஒருபோதும் வாய்ப்புகளை விட்டுவிடகூடாது. 

சுதந்திரம் அடைந்து  75 ஆவது ஆண்டில் நுழைகிறோம் என்பது நம் அனைவருக்கும் ஒரு சிறந்த தருணம், இது ஒரு எழுச்சியூட்டும் வாய்ப்பு,  நாம் எங்கிருந்தாலும் எந்த வடிவத்தில் இருந்தாலும் அன்னை பாரதத்தின் குழந்தையாக இந்த 75வது சுதந்திர விழாவை நாம் கொண்டாட வேண்டும். கொரோனாவுக்கு எதிரான  போராட்டத்தில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். இது எந்த ஒரு தனிப்பட்ட மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல, இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வெற்றி. உலகில் கொரோனா வைரசுக்கு எதிரான மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் நடந்து வருகிறது. ஒட்டுமொத்த உலகிற்கும் இந்தியா நம்பிக்கையூட்டும் நாடாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
 

click me!