
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா தரப்பு வேட்பாளர் டி.டி.வி தினகரனுக்கும் ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனனுக்கும் கட்சி சின்னம் முதல் தேர்தல் அறிக்கை வரை குடுமிபுடி சண்டை நிலவி வருகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சசிகலா தரப்பில் அவரது அக்காள் மகனான டி.டி.வி.தினகரனும் ஒ.பி.எஸ் தரப்பில் ஆர்.கே.நகர் மண்ணின் மைந்தனான மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னரே கட்சி மற்றும் ஆட்சி விவகாரத்தில் இருதரப்புக்கும் போட்டி நிலவி வந்தது. அதை தொடர்ந்து தேர்தலிலும் போட்டா போட்டி நிலவி வருகிறது.
அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை சின்னத்திற்கு இருதரப்பும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக அறிவித்தது.
இதை தொடர்ந்து அதிமுக பெயரையும் இரட்டை இலை சின்னத்தையும் பறி கொடுத்தனர். இதையடுத்து டி.டி.வி தினகரனுக்கு அதிமுக அம்மா என்ற பெயரும் மதுசூதனனுக்கு அதிமுக புரட்சிதலைவி அம்மா என்ற பெயரும் ஒதுக்கபட்டது.
மேலும் சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னமும் ஒ.பி.எஸ் தரப்புக்கு மின்கம்பம் சின்னமும் வழங்கப்பட்டது.
பின்னர், பிரச்சாரத்தை ஆரம்பித்த டி.டி.வி தினகரன் ஆளுங்கட்சி திறமை என கூறி பணபட்டுவாடாவை கையில் எடுத்தனர். இதுகுறித்து பன்னீர் அணி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
அதை தொடர்ந்து டி.டி.வி. தினகரன் மின்கம்பத்தை இரட்டை இலை போன்று சித்தரித்து ஒ.பி.எஸ் அணியினர் வாக்கு சேகரித்து வருவதாக புகார் அளித்தார்.
பதிலுக்கு பன்னீர் அணியும் அதே பாணியை கையாண்டுள்ளது. அதாவது வெயிலுக்கு மக்கள் அனைவரும் தொப்பி அணிகின்றனர். இதை டி.டி.வி தவறாக கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். எனவே தொப்பி சின்னத்தை முடக்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்.
இருதரப்பும் அடுத்தடுத்து புகார்களை தேர்தல் அதிகாரியிடம் நிரப்பி வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு போதுமான நேரம் இல்லை. மனுவை இன்னும் படிக்கவில்லை. படித்து விட்டு பதிலளிக்கிறேன் என சென்று விட்டார்.
புகார்களை பிரித்து படிக்க கூட நேரம் இல்லாத அளவிற்கு புகார்களை அடுக்கி வருகின்றனர் ஒ.பி.எஸ் தரப்பும், சசிகலா தரப்பும்.