
ஆர்.கே.நகர் தேர்தலையொட்டி கட்சி வேட்பாளர்கள் சூடு பிடிக்கும் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், திமுக சார்பில் அக்கட்சியின் 'செயல் தலைவி’ பிரச்சாரத்துக்கு வர வேண்டும் என்ற வேண்டுகோள் ஆர்.கே.நகரிலிருந்து ஆழ்வார்பேட்டை வரை சென்றிருக்கிறது. செயல் தலைவியா என்று குழம்ப வேண்டாம்... செயல் தலைவரின் இல்லத்தரசியைத்தான் செயல் தலைவி என்று உரிமையோடு அழைக்கிறார்கள்.
ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சில நாட்களுக்கு முன் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து, திமுக-வைச் சேர்ந்த சில பெண் பிரமுகர்கள் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவியான துர்காவை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தனர்.
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷ் மிகவும் எளிமையாக உள்ளதாகவும், அதனையே எதிர் கட்சிகள் பலவீனமாக எடுத்துக் கொள்வதாகவும், செயல் தலைவியான துர்கா ஸ்டாலினுடன் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் கட்சி பலத்தை நிரூபிக்க ஆர்.கே நகர் தேர்தல் களத்தில் பிரசாரத்திற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கு பதிலளித்த துர்கா ஸ்டாலின், தனக்கும் தேர்தல் களத்தில் இறங்கி உழைக்க வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால், கொளத்தூர் தொகுதி பிரசாரத்தில் வந்ததுக்கே அவர் லேசாக கோபித்துக் கொண்டார் என கூறி தொண்டர்களை சமாதானப் படுத்தி அனுப்பி உள்ளார்.
கொளத்தூர் தொகுதி பிரசாரத்தில், துர்கா ஸ்டாலின் பங்கேற்று மக்களிடேயே உரையாற்றியது அனைவரையும் கவரும் விதமாகவும், மக்களின் செல்வாக்கை பெரும் விதமாக அமைந்தது.
இந்நிலையில் ஆர்.கே நகரிலும் துர்கா ஸ்டாலின்,களம் இறங்கினால், தேர்தல் களம் சூடு பிடிப்பது மட்டுமின்றி, திமுக வின் வெற்றி வாய்ப்புக்கும் வழி வகுக்கம் என்ற நம்பிக்கையில் தொண்டர்கள் உள்ளனர் .