பாம்பு, பல்லி விஷத்தை விட துரோகத்திற்குத்தான் விஷம் அதிகம்... எடப்பாடியை இறங்கிய அடிக்கும் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Mar 30, 2021, 4:25 PM IST
Highlights

இந்த தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய மானத்தை மரியாதையை காப்பாற்றுகின்ற தேர்தல். மத வெறி பிடித்திருக்கும் பாஜகவிடமிருந்து நம்முடைய நாட்டை காப்பாற்றுகின்ற தேர்தல். எனவே ஒரு அ.தி.மு.க. வேட்பாளர்கூட வெற்றி பெறக் கூடாது. 

பாம்பு, பல்லிக்கு கூட விஷம் கம்மியாகத்தான் இருக்கும். ஆனால் துரோகத்திற்குத்தான் விஷம் அதிகமாக இருக்கும் என முதல்வர் பழனிசாமியை மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்;- முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி ஊர் ஊராகச் சென்று கொண்டிருக்கிறார். ஊர்ந்து ஊர்ந்து போனவர், இப்போது ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறார். இதை சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். நான் என்ன பாம்பா? பல்லியா? என்று கேட்பார். பாம்பு, பல்லிக்கு கூட விஷம் கம்மியாகத்தான் இருக்கும். ஆனால் துரோகத்திற்குத்தான் விஷம் அதிகமாக இருக்கும். அவர் யார் யாருக்கெல்லாம் துரோகம் செய்தார் என்பது உங்களுக்கு தெரியும். அவர் சில நாட்களுக்கு முன்பு இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தபோது அவர் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதாவது, ‘இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் ஒரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வைக் கூட தேர்ந்தெடுக்கவில்லை. அதனால்தான் திட்டங்கள் எல்லாம் இந்த மாவட்டத்திற்கு வரவில்லை” என்று பேசியிருக்கிறார்.

நினைத்துப் பாருங்கள். அவர் முதலமைச்சர். அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற்காக இந்த மாவட்டத்தையே புறக்கணித்தவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டாமா? அவரே பிரச்சாரத்திற்கு வந்த போது வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவரைக் கூட நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதனால்தான் உங்களுக்கு வேண்டிய திட்டங்கள் கிடைக்கவில்லை என்று வாய் கூசாமல் சொல்லி இருக்கிறார் என்றால் அவரை முதலமைச்சராக உட்கார வைக்கலாமா? வாக்களித்த மக்களுக்கு ஏதாவது செய்து இருக்கிறாரா? அந்தத் தொகுதிக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? இதைவிட கேவலம் என்னவென்றால் அவரைத் தேர்ந்தெடுத்த எடப்பாடிக்கே எதுவும் செய்யவில்லை.

நான் அந்த தொகுதிக்குச் சென்றிருந்தேன். நீங்கள் இப்போது அவர் பெயரைச் சொல்லாதீர்கள் என்று சொன்னது போல, நான் எடப்பாடிக்கு சென்றபோது எடப்பாடி பழனிசாமி என்று சொல்லாதீர்கள். அது எங்கள் ஊருக்கு கேவலம் என்று சொன்னார்கள். அது தான் அங்கு இருக்கும் நிலை. அதுமட்டுமல்ல, இங்கு டெல்லி பிரதிநிதி ஒருவர் இருக்கிறார். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம். அவர் முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் தொழில்ரீதியாக ஒரு பார்ட்னராக இருக்கிறார்.

அவருக்கு குமரி முதல் கம்போடியா வரை சொத்து இருக்கிறது. ஆனால் குமரி மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறாரா? ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர். சசிகலாவால் டெல்லி பிரதிநிதி பொறுப்பை ஏற்றவர். சசிகலாவால் உயர்த்தி வைக்கப்பட்டவர், இப்போது பழனிசாமியிடம் உட்கார்ந்திருக்கிறார். இந்த தேர்தலுக்கு பிறகு அங்கேயும் துரோகம் செய்துவிட்டு பா.ஜ.க.வில் சேரப்போகிறார். அது உறுதி. அது நடக்கிறதா? இல்லையா? என்று பாருங்கள்.

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன். அவரை பொன். ராதாகிருஷ்ணன் என்று சொல்லக்கூடாது; பொய் ராதாகிருஷ்ணன் என்றுதான் சொல்லவேண்டும்.  இன்றைக்கு பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவ்வாறு வந்து வழக்கம்போல பொய் சொல்லிவிட்டுப் போகப்போகிறார். அவர் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ அந்த அளவிற்கு பா.ஜ.க.வுக்கு வாக்குக் குறையப் போகிறது. அதுதான் நடக்கப்போகிறது.

இந்த தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய மானத்தை மரியாதையை காப்பாற்றுகின்ற தேர்தல். மத வெறி பிடித்திருக்கும் பாஜகவிடமிருந்து நம்முடைய நாட்டை காப்பாற்றுகின்ற தேர்தல். எனவே ஒரு அ.தி.மு.க. வேட்பாளர்கூட வெற்றி பெறக் கூடாது. இவ்வாறு குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம், அவர்கள் வெற்றி பெற்றால் அ.தி.மு.க.வாக இருக்க மாட்டார்கள், பாஜக-வாகத்தான் இருப்பார்கள். அதற்கு உதாரணம், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் 38 இடங்களில் நாம் வெற்றி பெற்றோம். ஒரே ஒரு இடத்தில் அதிமுக வெற்றி பெற்றது – ஓ.பி.எஸ். மகன்.

அவர் இப்போது அ.தி.மு.க. எம்.பி.யாக அல்லாமல் பாஜக எம்.பி.யாக இருக்கிறார். அவருடைய லெட்டர் பேடில் அவருடைய கட்சித் தலைவர் படம் இல்லாமல், மோடியின் படம்தான் இருக்கிறது. எனவே ஒரு அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றாலும் அவர் பாஜகதான். பாஜக வரப்போவதில்லை. அவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையவே முடியாது. இது திராவிட மண். நம்முடைய தமிழை அழித்து ஒழிப்பதற்கு, சமஸ்கிருதத்தை - இந்தியைத் திணித்து, மதவெறியைத் திணிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது. உயிரை காக்க மாஸ்க். கூட்டமாக கூடும் இடத்தில் வரும் போது, அனைவரும் மாஸ்க் போடுங்கள் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

click me!