இரண்டே ஸ்டெப்பில் சறுக்கிய எடப்பாடி... ரிவர்ஸ்கியர் போட்டு தடுமாறி பயணிக்கும் அதிமுக அரசு..!

By Thiraviaraj RMFirst Published May 7, 2020, 5:34 PM IST
Highlights

அடுத்தடுத்து இரண்டு மோசமான முடிவுகள் மூலம், பல அடிகள் சறுக்கி, கீழே வந்து விட்டது தமிழக அரசு. யார் கொடுத்த ஆலோசனை இது..?   என கேள்வி எழுப்பியுள்ளார் வருமானவரிதுறை ஓய்வு பெற்ற அதிகாரியும், எழுத்தாளருமான பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி.
 

அடுத்தடுத்து இரண்டு மோசமான முடிவுகள் மூலம், பல அடிகள் சறுக்கி, கீழே வந்து விட்டது தமிழக அரசு. யார் கொடுத்த ஆலோசனை இது..?   என கேள்வி எழுப்பியுள்ளார் வருமானவரிதுறை ஓய்வு பெற்ற அதிகாரியும், எழுத்தாளருமான பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி.

இதுகுறித்து அவர், ’’கஜா புயல் பாதிப்புகளை எதிர் கொண்ட விதம், பொது விநியோகத் திட்டத்தில் இலவசங்கள் வழங்கியமை, காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, கொரானா தொற்றுக்கு எதிரான விரைந்த நடவடிக்கைகள்... என்று படிப்படியாக ஆதரவைப் பெருக்கிக் கொண்டு வந்தது தமிழக அரசு. 

தமிழக மக்கள் மத்தியில் பரவலாக, இந்த அரசைப் பற்றிய நல்லெண்ணம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தக்க வைப்பதற்கான பணிகளில் இறங்குவதை விட்டு, அதற்கு நேர் எதிர்த்திசையில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது. ஏன் இந்தத் தற்கொலை முயற்சி..? கடந்த சுமார் 40 நாட்களாக, மதுக்கடைகள் மூடிக் கிடந்தன. ஒரு நாள் குடிப்பதை நிறுத்தினாலும், உடல் அளவில் மற்றும் மனதளவில் பாதிக்கப்படுவார்கள் என்றெல்லாம் கூவிக் கொண்டு இருந்தார்கள். அப்படி எதுவும் நடந்து விடவில்லை. படிப்படியாய் மதுவின் பிடியிலிருந்து மீண்டு வந்து விட்டார்கள். கொரானாவால் ஏற்பட்ட மிகப் பெரிய நன்மை இது. ஆனால்..? 

அரசுக்கு வருவாய் இழப்பு என்கிற காரணம் சொல்லி, மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு விட்டன. கிடைத்தற்கரிய நல்ல வாய்ப்பை கோட்டை விட்டாயிற்று. ஒருபுறம் அரசுக்கு வருமானம் என்றால், மறுபுறம் - ஏழை வறிய மக்கள் வசம் இருக்கும் கொஞ்ச நஞ்ச பணத்தையும் அடித்துப் பறிக்கிற மாபாதகம் அல்லவா...? அரசுக்கு வருமானம் வருகிற வழிகள் எதையும் முயற்சித்துப் பார்க்காமல், அடித்தட்டு மக்களின் குறிப்பாக ஏழைப் பெண்களின் நல்வாழ்வை பாதிக்கிற மக்கள் விரோத நடவடிக்கை எதற்காக...? 

சற்று முன்னர் மற்றொரு அறிவிப்பு - தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, 58இல் இருந்து 59ஆக, ஓராண்டு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. கண்டிக்கப்பட வேண்டிய முடிவு இது. பல லட்சம் இளைஞர்கள், வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதிலும் அரசு வேலை கிடைக்காதா என்று ஏக்கத்துடன் காத்துக் கொண்டு இருப்பவர்கள் ஏராளம். கொரானா பாதிப்பு காரணமாய், தனியார் வேலை வாய்ப்பும் சுருங்கிப்போய் விட்ட நிலையில், இந்த நீட்டிப்பு தேவைதானா...? 

ஓய்வுக் காலப் பலன்களைத் தருவதால் ஏற்படும் நிதிச் சுமையை சுட்டிக் காட்டி, நியாயப் படுத்தவே முடியாது. வேண்டுமானால் ஓரிரு ஆண்டுகளுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாகத் தராமல், அரசுத் திட்டங்களில் முதலீடு செய்து, பிறகு வட்டியுடன் தருவதாகச் சொல்லலாமே..! இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தருவது முக்கியமா..? நிதிச்சுமையைக் காரணம் காட்டி, பணி நீட்டிப்பு செய்தல் முக்கியமா..? அரசுக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்..? 

சில கேள்விகள் எழத்தான் செய்யும். மத்திய அரசுப் பணிகளில் மட்டும் 60 வயது வரை பணியாற்றலமா..? அங்கும் குறைக்கத்தான் வேண்டும்.  இது விஷயத்தில், உயர்கல்வித் துறையில் உள்ள குளறுபடிகள் கேலிக்குரியவை. கல்லூரிப் பணியில் ஓய்வு - 58 வயதில்; மாநிலப் பல்கலைக் கழகத்தில் - 60 வயது; தன்னிகர் பல்கலையில் (deemed university) - 62; மத்திய பல்கலைக் கழகம் - 65 வயது. இவையும் களையப்பட்டு ஒரு 'சீர்மை' (uniformity) கொண்டு வரப்பட வேண்டும். 

58ஆண்டுகள் (அ) 30 ஆண்டு பணிக்காலம் - இரண்டில் எது முதலில் வருகிறதோ, அத்துடன் பணி ஓய்வு தரலாம். இந்தக் கருத்து முற்றிலும் தவறுதலாகவும் இருக்கலாம். ஒவ்வொருவரின் தேவை / எதிர்பார்ப்பு மாறுபடலாம். எனவே இது குறித்து தீர ஆராய்ந்து முடிவு செய்தலே நலம். இப்போதைக்கு, உடனடியாக இரண்டு முடிவுகளையும் திரும்பப் பெற வேண்டும்.

எனது கருத்துகளில் அரசியல் கட்சி சார்ந்த பார்வையை எப்போதுமே தவிர்த்து வருகிறேன். ஆனாலும், ரத்து செய்யும் கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக மட்டும், மதுக் கடைகள் திறப்பு மற்றும் ஓய்வு வயது நீட்டிப்பு தொடர்பான, அரசியல் கருத்தை முன் வைக்கிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வலுவான தலைமை இல்லாது அதிமுக, அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலைச் சந்திக்க வேண்டி உள்ளது. இந்த நிலையில், மது விலக்கு அறிவிப்பு, பெண்களின் ஒட்டு மொத்த ஆதரவைப் பெருமளவில் உறுதியாகப் பெற்றுத் தரும். தேர்தலின் போது, அதிமுகவின் கையில் இது மிகப் பெரிய ஆயுதமாக இருந்து இருக்கும். விட்டுவிட எப்படி மனம் வந்தது..? 

அரசு ஊழியர் விவகாரத்திலும், உண்மையில் புத்திசாலித் தனமாக நடந்து கொள்வதானால், ஓய்வு பெறும் வயதைக் குறைத்து, புதிய பணியிடங்களை உருவாக்கி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்து இருக்க வேண்டும். எதிர்மறைச் சிந்தனையுடன் செயல்பட்டு இருக்கிறது இந்த அரசு. அரசியல் பார்வையை விட்டு வருவோம். நம்மைப் பொறுத்த மட்டில், மதுக்கடைகள் கூடாது; இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருதல் வேண்டும். இரண்டு முனைகளிலுமே, இந்த அரசு, பல அடிகள் சறுக்கி, தனக்கு இருந்த ஆதாயத்தைக் கோட்டை விட்டு இருக்கிறது. இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை. 'பொது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து' தனது நடவடிக்கையை திரும்பப் பெற்றுக் கொள்வதாகச் சொல்லி விடலாம்.

பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி

தனது கட்சிக்கும், தனது அரசுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமானால், மதுவிலக்கு வேண்டும்; இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும். மாண்புமிகு முதல்வர் மறுபரிசீலனை செய்யட்டும்’’ என்கிறார். 

click me!