கலைஞர் என்ற பெயரை உண்மையில் வைத்தது யார் தெரியுமா? தெரியாதவர்கள் மட்டும் படிங்க...

By sathish kFirst Published Sep 6, 2018, 6:03 PM IST
Highlights

திமுக தலைவர் கருணாநிதிக்கு கலைஞர் என்ற புனைப் பெயர் உண்மையாகவே யார்வைத்தது என்ற சுவாரஷ்யமான தகவல்களை கி.பிரியாராம் என்ற திமுக தொண்டர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கருணாநிதியைப் பற்றி யாருக்கும் தெரியாத இந்த தகவல்களை உங்களுக்கு அப்படியே கொடுத்துள்ளோம்.

தமிழகம் மிகப் பெரும் கலைஞனை இழந்து தவிக்கிறது.இந்தக் கலைஞர் பட்டம் ஏதோ நடிகவேள் கொடுத்ததாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அந்தப் பட்டத்தை வழங்கியது சாதாரண ஒரு கூலித் தொழிலாளி. நடிக வேளின் நாடகத்திற்கு எலக்ட்ரீஷியனாக பணியாற்றிய பாஸ்கரன் என்ற சாதாரணத் தொழிலாளி தான் நடிக வேளிடம் சென்று ஐயா நம்ம நாடக விளம்பரங்களில் அறிஞர் அண்ணா என்று போடுகிறோம். 

ஆனால் வெறும் கருணாநிதி என்று விளம்பரப்படுத்துகிறோமே ஏன் கலைஞர் கருணாநிதி என போட்டு விளம்பரம் செய்யக்கூடாது என்ற நியாயமான கோரிக்கையோடு நடிடவேளிடம் நின்றபோது அவரும் சிரித்துக்கொண்டே சரிடா உன் இஷ்டம் போலவே எழுதிக்கோ என அனுமதியளித்தார். 

நாடகத்தின் விளம்பர தட்டிகளை எழுதுவது பாஸ்கரன் பணி. அவர் தான் முதன்முதலில் கலைஞர் கருணாநிதியின் தூக்குமேடை என விளம்பரத் தட்டியில் எழுதியவர். அதைப் பார்த்துத் தான் நடிகவேள் தனது உரையில் கலைஞர் கருணாநிதி என பேசத் தொடங்கினார்.

உலகில் எவ்வளவோ பெரிய மனிதர்களுக்கு பட்டப்பெயர் உண்டு.ஆனால் ஒரு சாதாரணத் தொழிலாளி கொடுத்த பட்டம் இப்படி நீக்கமற நிறைந்திருந்தது கலைஞருக்கு மட்டும் தான். யார் அவரை அழைத்தாலும் கலைஞரை மட்டும் சொன்னால் போதும் அது அவரை மட்டுமே குறிக்கும்.

தனது பொது வாழ்க்கையில் என்பது ஆண்டு காலம் ஒருவர் உழைத்துக்கொண்டே இருந்தார் என்றால் அது கலைஞர் ஒருவர் தான்.பதினான்கு வயதில் தொடங்கிய பொது வாழ்வுப் பணி மரணம் வரையிலும் கூடவே வந்தது சாதாரண விஷயமல்ல. பதிநான்கு வயதில் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம் என ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் அந்த வயதில் அவர் ஒரு இதழை நடத்தினார் மாணவர் நேசன் என்ற அந்த இதழில் எழுதத் தொடங்கிய அந்தக் கரங்கள் தனது வாழ்நாளில் எழுதிக் குவித்த வரிகளை கொந்சம் அசை போட்டால் அந்த மகத்தான மனிதனின் உன்னதம் நமக்குப் புரியும்.

பதினைந்தாவது வயதில் தொடங்கியது தான் முரசொலி. அதில் வந்த ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு யாரப்பா இந்தப் பையன் என அறிஞர் அண்ணா கேட்டார்.அன்று தொடங்கி அண்ணன் தம்பி நட்பு அண்ணாவின் மரணம் வரையிலும் கூடவே வந்தது. அந்த எழுத்து தான் தந்தைப் பெரியாரிடம் நெருங்க வைத்தது.அந்த எழுத்துத் தான் மக்கள் திலகத்தையும் நடிகர் திலகத்தையும் நெருங்க வைத்தது.அந்த எழுத்துத் தான் கோடான கோடி உடன்பிறப்புக்களை கட்டிப்போட்டது.

எழுதுவதற்கென்றே பிறந்த கரங்கள்.ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இவ்வளவு எழுத முடியுமா?.என்ற வியப்பின் எல்லையைத் தொட்ட வாழ்வு அவருடையது. திராவிட இயக்கத்தின் தளபதியாக நின்றுகொண்டு பத்திரிகைகளான முரசொலி குடியரசு என அவரது கட்டுரை தாங்கி வந்த ஏடுகளைத் தொட்டாலே போதும் அந்தக் கனலான வார்த்தைகளில் வீரியம் நம் கரங்களில் சுடும்.அன்றைய கால கட்ட அரசியல் சூழ்நிலைகள் மட்டுமல்ல சமுதாய அவலக்களையும் அவரது பேனா சாடியிருக்கிறது. 

அந்த வயதில் வரும் சிந்தனைகள் அல்ல அவைகள். பள்ளிப் படிப்பைத் தாண்டாத ஒரு இளைஞனால் இப்படியும் எழுத முடியுமா? அண்ணாவாவது முதுகலை படித்து தன்னை அறிஞராக வளர்த்துக்கொண்டவர். எந்தவித பின் புலமும் இல்லாத ஒரு இசை வேளாளர் குடும்பத்தில் பிறந்து இப்படி எழுத ஒரு இளைஞரால் முடிகிறதென்றால் அவரது சிந்தனையின் வீரியத்தை தாம் புரிந்து கொள்வது கடினமாகத் தான் இருக்கிறது.

அவரது எழுத்துத் திறமை தான் அவரை திரையுலகிற்கு இழுத்துக்கொண்டு வந்தது.முதன் முதலில் அவர் ராஜகுமாரியில் இணையும்போது அவரைப் பார்த்தால் யாருமே நம்ப மாட்டார்கள்.ஒரு முழுப் படத்திற்கும் வசனம் எழுத மிகப் பெரிய ஜாம்பவான்களே கொஞ்சம் ஆடிப்போவார்கள்.ஐம்பதில் வேதாந்தம் கம்பெனியார் மருத நாட்டு இளவரசியை எடுக்கும்போது அவர்கள் தயங்கக் காரணம் அவரது தோற்றம் தான். ஆனால் ஒரே வாரத்தில் அதன் முழு ஸ்கிரிப்டை எழுதிக் கொண்டு போய் கொடுத்தபோது அசந்தே போய்விட்டார்கள்.அந்தப் படம் தான் மக்கள் திலகம் திரையுலகில் நுழைய தனக்கென ஒரு அடையாளத்தைப் பெற வழி வகுத்தது.

சரித்திரப் படங்களுக்கு வசனம் எழுதுவது சாதாரண வேலையல்ல.ஒரு ஆயுதத்தை எழுத வேண்டுமென்றால் கூட அதன் சரித்திர பின்னணி தெரிந்திருக்க வேண்டும். குறுவாளை எங்கே பயன்படுத்த வேண்டும்? குத்தீட்டியை எங்கே பயன்படுத்த வேண்டும் என்ற சரித்திர அறிவு ஒரு வசனகர்த்தா அறிந்திருக்க வேண்டும். ஏகப்பட்ட திருப்பங்களோடு ஏகப்பட்ட கேரக்டர்களோடு ஏகப்பட்ட சரித்திரப் பெயர்களோடு மல்லுக்கட்ட வேண்டும்.கைக்கு வந்ததை எல்லாம் எழுதிக்கொண்டு போக முடியாது.அந்தக் கேரக்டர் பேசும் வசனம் தான் திரைக்கதையை தீர்மானிக்கும்.ஒரு வார்த்தை கூட கதையின் போக்கை மாற்றிவிடும்.

அடுத்து வந்த மந்திரிகுமாரியின் வசனங்களை நாம் இன்று கேட்டாலும் வியப்பில் வாய் விரியும்.ஏற்கனவே அந்த இந்த நாடகத்திற்கு வசனங்களை எழுதியிருந்தாலும் அவை திரைப்படமாகும்போது வேறொரு தளத்தை நமக்குக் காட்டியிருக்கும். இன்று கூட மாடர்ன் தியேட்டர்ஸில் அந்த ஸ்கிரிப்ட் உண்டு.அந்த வசனப் பக்கங்களின் ஓரத்தில் இப்படி இப்படி காட்சிகள் எடுக்க வேண்டும் என்ற கேமிராக் கோணங்களைக் கூட அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.நினைத்துப் பார்த்தால் அந்த வயதில் இவ்வளவு நுணுக்கமாக ஒருவரால் எழுத முடியுமா என்ற வியப்பே நமக்கு ஏற்படுகிறது.

அநேகம் பேருக்குத் தெரியாத படம் குறவஞ்சி.அந்தப் படத்தை வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்.ஆஹா என்ன ஒரு எழுத்துத் திறமை.அவரது கைப்பட்ட அந்தத் தமிழ் மொழி அவர் ஆடிய ஆட்டத்திற்கெல்லாம் ஈடுகொடுத்து விளையாடிய அழகு அந்தப் படத்தில் தெரியும். தேவகி மணமகள் பணம் என அவர் சமூக அவலக்களுக்குள் நுழைத்தபோது நமக்கெல்லாம் கிடைத்த கலைஞர் ஒரு சாதாரண ஆளல்ல என்பது புரியும்.

அடித்துத் துவைத்த வசனங்களோடு வெளிவந்த பராசக்தி நடிகர் திலகம் எனும் மகத்தான கலைஞனை நமக்கு அடையாளம் காட்டியது.எப்படி மருத நாட்டு இளவரசி மக்கள் திலகத்திற்கு ஒரு பாதையைப் போட்டுக்கொடுத்ததோ அதே போல் பராசக்தி நடிகர் திலகத்திற்கு ஒரு அழகான பாதையைப் போட்டுக்கொடுக்கக் காரணம் கலைஞர் என்ற மகத்தான வசனகர்த்தா.அவரது பேனா பிரசவித்த வார்த்தைகளைப் பேசியதால் நடிகர் திலகம் அடையாளம் காட்டப்பட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.இதை நடிகர் திலகமே ஒப்புக்கொண்ட தும் உண்மை.

சிங்கத் திருநாடே நீ சிலந்திக் காடாய் மாறியது எப்போது?.வீரப் பெண்களின் ஒழுக்கங்களை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற எனதருமைப் பொன்னாடே நீ வீதிகளில் விபச்சாரிகளைத் திரியவிட்டு உன் விழிகளை மூடிக்கொண்டது ஏன்?. வானத்தை முட்டும் மாளிகைகள் மானத்தை இழந்த மனிதர்கள்.உயர்ந்த கோபுரங்கள் தாழ்ந்த உள்ளங்கள்.ஆஹா இனி இப்படி எழுத யார் இருக்கிறார்.அப்படிப் பேசி உணர்ச்சிப் பிழம்பாக எந்த நடிகர் இருக்கிறார்.

கட்டளையா இது? கரைகாண முடியாத ஆசை பொன்னும் மணியும் மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே மணியே முத்தே என்றெல்லாம் கொஞ்சிக் குலவி தங்கத்தினாலான கட்டிலிலே சந்தனத் தொட்டிலிலே வீரனே என் விழி நிறைந்தவனே. என்னைய்யா இது? எப்படி மறப்பது இம் மாதிரி வசனங்களை. குடும்பத் தகறாரு கொலு மண்டபத்திற்கு வந்த வசனங்களை மறக்க முடியுமா? அரசின் உத்தரவென்ன ஆண்டவனின் உத்தரவிற்கே காரணம் கேட்கும் காலம் வந்து விட்டது என கிடைத்த சந்துகளில் எல்லாம் சுய மரியாதைக் கருத்துக்களைப் புகுத்தி படம் பார்க்கும் மக்களைத் தட்டியெழுப்பிய அந்தக் கரம் என்று முடங்கிப்போனது காலத்தின் கட்டளையல்லவா.

திரைத் துறையில் கலைஞரின் பங்கு மகத்தானது.ஐம்பத்து மூன்றில் மக்கள் திலகம் பி.எஸ்.வீரப்பா கூட்டணியோடு தொடங்கிய மேகலா பிக்சர்ஸ் நாம் என்ற படத்தோடு ஆரம்பிக்கப்பட்டு ஏகப்பட்ட படங்களைத் தயாரித்தது.அடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸ் உருவாகி பல படங்களை நமக்குத் தந்தது. எம்.ஜி.ஆரின் பத்து படங்களுக்கு கலைஞர் வசனம் எழுதிய அதே நேரத்தில் சிவாஜிக்கு பனிரெண்டு படங்களும் எஸ்.எஸ்.ஆருக்கு பத்து படங்களுக்கும் எழுதியிருக்கிறார்.இவையெல்லாம் அவர் அரசியலில் முழு வீச்சில் இருக்கும்போது எழுதியவை.

அவர் எதிர்க்கட்சித்தலைவராக மக்கள் திலகத்தோடு போராடிக்கொண்டிருக்கும்போது இருபதுக்கும் மேற்பட்ட படங்களுக்குப் பணியாற்றியது அந்தக் காலத்தில் மிகப் பெரிய சாதனை.தூக்கி உள்ளே போட்டாலும் சிறையில் இருந்துகொண்டே நீதிக்கு தண்டனை வீரன் வேலுத் தம்பி படங்களுக்கு எழுதியது அதை விட சாதனை.

பல முகங்களைக் கொண்ட கலைஞரின் ஒரு முகம் சரித்திரக் கதைகளை எழுதுவது அவரது ரோமாபுரிப் பாண்டியனும் தென் பாண்டி சிங்கமும் இன்றும் வெற்றி நடைபோடும் சரித்திர நாவல்கள்.பொன்னர் சங்கர் பாயும் புலி பண்டார வன்னியன் அருமையான சரித்திர நவீனங்கள்.இதற்கு இடையில் ஏகப்பட்ட இலக்கியப் புத்தககங்கள்.யாருமே தொடுத் தயங்கும் திருக்குறலுக்கு உரை எழுதிய அருமையான பணியும் தொல்காப்பியத்திற்கு பூங்கா அருளியதும் மகத்தான பணிகள்.தாய்க்காவியம் ஒரு அருமையான படைப்பு.குறளோவியம் அதை விட அருமை.

தனது திருமணப் பத்திரிகையில் மு.கருணாநிதி முரசொலி ஆசிரியர் என ஆரம்பித்த பத்திரிகை ஆசிரியர் கலைஞரின் பணியைச் சொன்னால் இந்த தாள் போதாது. அவர் ஆசிரியராக இருந்துகொண்டு அன்றாட அலுவல்களை கவனிப்பதே அழகு.ஒவ்வொரு பக்கத்திற்கும் ப்ரூஃப் பார்த்துக்கொண்டே வருவார்.

எங்காவது தவறு கண்டால் கையில் ஒரு ஸ்கேல் வைத்திருப்பார்.கையை நீட்டச் சொல்லி செல்லமாக அடிப்பது அவரது வழக்கம். சில சமயங்களில் வைத்திருக்கும் பேனாவை அவர்கள் மீது தெளிப்பார்.அந்த மை பட்ட சட்டைகள் அவர்களுக்கு விழுப்புண் போல.எல்லாமே தவறுக்கு தண்டனைகள்.ஆனால் அவர் எத்தனை பக்கங்கள் எழுதினாலும் தவறே இல்லாமல் அடித்தல் திருத்தல் இல்லாமல் அழகாக இருக்கும்.அவரது பணியாளர்கள் சொல்கிறார்கள். சார் அவர் ஒரு கூகுள். 

எந்த செய்தி கேட்டாலும் விரல் நுனியில் வைத்திருப்பார். அவர் உடன்பிறப்பிற்கு எழுதும் கட்டுரைகளில் இதைக் காணலாம்.அன்றாட அரசியல் மட்டுமல்ல உலக அரசியலையும் அதில் அவர் அலசியிருப்பார். கரிகாலன் பதிலில் அவரது நக்கலும் நையாண்டியும் பிரசித்தி பெற்றது.அவரைப் போல நேரத்திற்குத் தகுந்த மாதிரி ஜோக் அடிக்க யாராலும் முடியாது.சட்டசபை உரைகளைப் பார்த்தால் எதிரிகள் கூட கைதட்டி மகிழும்படி பேசியிருப்பார். அதுவும் புத்தகங்களாக வந்திருக்கிறது. இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் தமிழக வரலாற்றோடு பின்னிப் பிணைந்த வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் இனி பிறக்கப்போவதில்லை எனும்போது கலைஞரின் இழப்பு ஒவ்வொரு தமிழக மக்களின் இழப்பு என்றே சொல்லத் தோன்றுகிறது.

click me!