
தமிழ்நாட்டில் எப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தோ, அதே போல் கேரளாவில் மோகன் லால். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மோகன் லாலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். லால் லேட்டன் என்று அனைவரலாலும் அன்போடு அழைக்கப்படும் மோகன் லாலுக்கு பெண்கள் மத்தியிலும் செல்வாக்கு அதிகம். திரைப்படங்களை பொறுத்தவரை ஆன்மிக படங்களில் நடிக்கவும் இவர் ஆர்வம் காட்டுவார்.
இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புலி முருகன் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. தற்போது இவர் நடிப்பில் வெளியாக உள்ள ஒடியன் திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் என்றால் சற்று ஒதுங்கி இருக்கும் மோகன் லாலுக்கு தற்போது வயது 58. இனியும் நடிகைகளை சுற்றிக் கொண்டு திரைப்படங்களில் நடனம் ஆடிக் கொண்டிருக்க முடியாது என்கிற முடிவுக்கு மோகன் லால் வந்துவிட்டார்.
இதனால் சமூக சேவைகளில் மோகன் லால் ஆர்வம் காட்டி வருகிறார். எதிர்கால கேரளாவை உருவாக்குவோம் என்கிற ரவுண்ட் டேபிள் கான்பிரன்ஸ் ஒன்றுக்கு மோகன் லால் ஏற்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம் மோகன் லால் சந்தித்து பேசினார். மேலும் பிரதமருடனான சந்திப்பு ஒரு பயணத்தின் துவக்கம் என்றும், இந்த துவக்கம் ஒரு கிருஷ்ண ஜெயந்தி போன்ற ஒரு நல்ல நாளில் நிகழ்ந்திருப்பதாகவும் ட்விட்டரில் மோகன் லால்குறிப்பிட்டுள்ளார்.
துவக்கம் என்று மோகன் லால் கூறியிருப்பது அரசியல் பயணத்தை என்றும், அவர் விரைவில் பா.ஜ.கவில் இணைய உள்ளதாகவும் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் இருந்து சுரேஷ் கோபி எனும் நடிகரை பா.ஜ.க நாடாளுமன்றத்திற்கு நியமன உறுப்பினராக தேர்வு செய்தது. ஆனால் அவர் அரசியலில் தீவிரம் காட்டவில்லை. இதனால் மோகன் லாலை வைத்து கேரளாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்டமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மோகன் லாரை தனது வேட்பாளராக பா.ஜ.க களம் இறக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பிறகு 2021ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவின் முதலமைச்சர் வேட்பாளராக மோகன் லாலை உயர்த்திப் பிடிக்கவும் பா.ஜ.க திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது. ஆனால் இந்த தகவல்களை உறுதிப்படுத்த கேரள பா.ஜ.க மூத்த தலைவர் முரளிதரன் கூறியுள்ளார்.
ஆனால் மோகன் லாலோ இந்த தகவல்களை மறுக்கவும் இல்லை, ஆம் என்று ஏற்கவும் இல்லை. எது எப்படியோ கேரளாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக பா.ஜ.க உள்ளது. இந்த வளர்ச்சியை மேலும் வேகப்படுத்த மோகன் லால் போன்ற பிரபலங்கள் அவசியம் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். எனவே மோகன் லால் நிச்சயம் பா.ஜ.கவில் இணைவார் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.