போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவுள்ளது.
வேலை வாங்கி தருவதாக மோசடி
அ.தி.மு.க ஆட்சியில் கடந்த 2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை சென்னை,கரூர், திருவண்ணாமலை,கும்பகோணம் என செந்தில் பாலாஜிக்கு சொந்தமான அவரது வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இதனையடுத்து மோசடி தொடர்பாக மூன்று வழக்குகள் பதியப்பட்டன. அதில் ஒரு வழக்கில் செந்தில்பாலாஜி, அவரது அண்ணன் அசோக் குமார் ,உதவியாளர் சண்முகம், போக்குவரத்து கழக பணியாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது நேரடியாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.இந்த புகார் தொடர்பாக இந்த மூன்று வழக்குகளிலும் சென்னையில் உள்ள, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முறைகேடு தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்து விட்டதாகவும், எனவே சமரசமாக செல்ல விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது,
மாணவர்கள் பணியில் சேர முடியவில்லை
இதனையடுத்து இந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பொறியாளர் தர்மராஜ் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது அந்த மனுவில், பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வழங்க முன்னாள் அமைச்சர் முடிவெடுத்ததன் காரணமாக தகுதியான மாணவர்கள் பணியில் சேர முடியவில்லை எனவும் தங்களது மதிப்பெண் குறைத்து காட்டப் பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சமூகத்தை பாதிக்கும் குற்றங்கள் தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு அமர்வு ஏற்படுத்தி உத்தரவு
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது என்று கூறி பண மோசடி தொடர்பான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்தநிலையில் செந்தில் பாலாஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் இணைத்து விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வும் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, ராமசுப்பிரமணியன் அடங்கிய சிறப்பு அமர்வில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு விசாரிக்கப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்றுக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதிட்டது. அதேபோல்,
இன்று தீர்ப்பு அளிக்கும் உச்சநீதிமன்றம்
செந்தில் பாலாஜி சார்பில், சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச்சட்டத்தின் 50, 63வது பிரிவுகளை எதிர்த்து ரிட் மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், அமலக்கதுறைக்கு ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தை தற்போது தீர்மானிக்க முடியாது என கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்ந்து வாதம் மற்றும் பிரதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ண முராரி மற்றும் ராமசுப்பிரமணியம் ஆகியோர் கோடை விடுமுறை காலத்தில் ஓய்வு பெற உள்ள நிலையில் இன்று தினம் தீர்ப்பு வழங்க உள்ளனர்
இதையும் படியுங்கள்